*தொழிலாளர் துறை உதவி ஆணையர் எச்சரிக்கை
ஆரணி : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஆரணியில் தொழிலாளர் துறை சார்பில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து அனைத்து அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கங்கள், வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி தலைமை தாங்கினார். பிடிஓக்கள் ரேணுகோபால், ராஜேஷ்வரி, தாசில்தார் கவுரி, சுகாதார ஆய்வாளர் வடிவேல், அலுவலக உதவியாளர் கோபி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிடிஓ குப்புசாமி வரவேற்றார்.
இதில் திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவிஜெயராம் கலந்து கொண்டு விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், ‘ஆரணி பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு கடைகள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயர் பலகையை தமிழில் வைத்திருக்க இருக்க வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் வார்த்தைகள் தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் இருக்க வேண்டும்.
அதவாது 5:3:2 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும். பிறமொழிகளில் உள்ள பெயர் பலகைகளை அகற்றி, வரும் மே 15ம் தேதிக்குள் பெயர் பலகைகள் அனைத்தும் தமிழில் மாற்றிவைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ இவ்வாறு அவர் பேசினார். இதில், அனைத்து வணிகர்கள் நலச்சங்க பேரமைப்பு தலைவர் ராஜான், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செங்கம்: செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவானந் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் ஆத்திப்பழம் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
The post வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் appeared first on Dinakaran.
