×

பேச்சிப்பாறை அருகே அட்டகாசம் செய்த யானை

குலசேகரம், ஏப். 23: குமரி மாவட்டத்தில் மலை கிராமங்கள் நிறைந்த பகுதி பேச்சிப்பாறை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான இங்கு வன விலங்குகளின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் அவ்வப்போது யானை, கரடி, புலி போன்றவைகளால் மனிதர்கள் தாக்கப்படுவது உண்டு. விவசாய விளை பொருட்கள் இந்த வன விலங்குகளால் சேதப்படுத்தப்படுகிறது. இங்குள்ள மலை கிராமங்களில் அடிக்கடி யானை கூட்டம் புகுந்து நாசம் செய்வது வழக்கம். இந்த யானை கூட்டங்களை வனத்துறையினர் அடர்ந்த காட்டுக்குள் துரத்தி விடுவர். தற்போது ஒற்றை ஆண் யானை ஒன்று கடந்த 2 நாட்களாக தச்சமலை, பின்னமூட்டுதேரி ஆகிய மலை கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகிறது. தனியாக கம்பீர தோற்றத்துடன் வலம் வரும் இந்த யானை அங்குள்ள வாழை, தென்னை மற்றும் குடியிருப்புகளை நாசம் செய்து உள்ளது. இதன் தோற்றம் மற்றும் வேகத்தை கண்டு மக்கள் வெளியில் நடமாட பயப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று பழங்குடி மக்கள் உதவியுடன் யானையை கிழவியாறு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்தினர். ஒற்றை யானையின் நடமாட்டம் மலைவாள் கிராமங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பேச்சிப்பாறை அருகே அட்டகாசம் செய்த யானை appeared first on Dinakaran.

Tags : Pechiparai ,Kulasekaram ,Kumari district ,Western Ghats ,
× RELATED ஓய்வூதியர் தின விழா