×

தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகளையும் மீறி ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு: ஆளுநர் மாளிகை அறிவிப்பு


சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே மாநிலத்தின் எந்த ஒரு நலனுக்கும் அவர் முக்கியத்துவம் அளித்தது இல்லை. இதனால் தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததோடு, இனி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசத்தையும் விதித்து உத்தரவிட்டிருந்தது. அதில் குறிப்பிடத்தக்க மசோதா தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் இருப்பார் என்பதுதான்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 16ம் தேதி சென்னை தலைமை செயலத்தில் துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்கலை, கல்லூரி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உதகையில் வரும் 25, 26ம் தேதிகளில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் ஊட்டியில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் எனவும், அதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாநாட்டினை தொடங்கி வைப்பார் எனவும் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உதகையில் உள்ள ஆளுநர் ஆளிகையில் தொடர்ந்து 4வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆளுநர் ஆர்.என்.ரவி மாநாட்டுக்கு தலைமை வகிக்க உள்ளார். துணை வேந்தர்கள் மாநாட்டின் நோக்கம், தேசிய கல்வி கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விசார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்படவுள்ளன. கல்வித்துறை, அரசு மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் உரையாற்றவுள்ளார்கள்.

இந்திய அர சின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார். இம்மாநாடு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணை வேந்தர்களை ஒன்றிணைத்து பணியாற்றுவதையும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதையும், உயர்கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகளையும் மீறி ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு: ஆளுநர் மாளிகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vice Chancellors' conference ,Ooty ,Tamil Nadu ,Governor ,Chennai ,Governor's Mansion ,Vice Chancellors' ,Supreme Court ,R.N. Ravi ,Governor of ,Tamil ,Nadu ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்