×

திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீடு; நீதிக்கட்சியின் நீட்சி தான் இந்த ஆட்சி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில், நீதிக்கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது. நீதிக்கட்சியின் நீட்சி தான் இந்த ஆட்சி என்று தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் பேசியதாவது: 1936ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி.டி.ராஜன் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ்நாட்டின் முதல்வர் என்ற தகுதியோடு வெளியிடுகிறேன். 1937 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டபோது, என்றாவது ஒரு நாள் இதற்கு பழிக்கு பழி வாங்குவோம் என்று பி.டி.ராஜன் சொன்னார். 30 ஆண்டுகள் கழித்து, திமுக வரலாற்று வெற்றியை பெற்றபோது, பழிக்கு பழி வாங்கப்பட்டது என்று சொன்னார்.

திமுகவின் எழுச்சியை, வெற்றியை நீதிக்கட்சியின் வெற்றியாக எண்ணி நீதிக்கட்சி மறுபடியும் வென்றது என்று சொல்லி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியும், திமுகவின் சாதனைகளும், செயல்பாடுகளும் தான், 1971 தேர்தலில், திமுகவுக்குத் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும், பெரும்பான்மை பலத்தோடு கழக ஆட்சிதான் அமைய வேண்டும் என்று அறிக்கை வெளியிடுவதற்கு காரணமாக இருந்தது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விழாவின் அழைப்பிதழில், நீதிக்கட்சியின் இறுதித் தலைவராகவும் இருந்த என்று போட்டிருக்கிறீர்கள். நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீதிக்கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான்.

இன்றைக்கு எப்படி திராவிடத்தை ஒழிப்போம் என்று சில கைக்கூலிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதே மாதிரி, பி.டி.ராஜன் காலத்திலும், நீதிக்கட்சியை குழி தோண்டி பாதாளத்தில் புதைத்து விடுவேன் என்று ஒரு தலைவர் சொன்னார். ஆனால், பி.டி.ராஜனோடு தொடர்ச்சியாக, பண்பாளர் பழனிவேல் ராஜன் வந்தார், இப்போது, பழனிவேல் தியாகராஜனும் நம்முடன் இருக்கிறார். பழனிவேல் தியாகராஜன் பொறுத்தவரைக்கும், அறிவார்ந்த வலிமையான வாதங்களை வைக்க கூடியவர். நான் அவருக்கு கூற விரும்புவது, இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகதான் இருக்கவேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் அதை சொல்கிறேன் என்றால், அது அவருக்கே தெரியும்.

நம்முடைய எதிரிகள், வெறும் வாயையே மெல்லக் கூடிய விநோத ஆற்றல் பெற்றவர்கள் அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதை திமுக தலைவராக மட்டுமல்ல, உங்கள் மீது இருக்கின்ற அக்கறை கொண்டவனாகவும், அறிவுரை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன். என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்புகிறேன். வாழும் போதே வரலாறாக வாழ்ந்தவர் தான் பி.டி.ராஜன். சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி இந்தியக் கூட்டாட்சி ஆகிய கருத்துகளை தமிழ் மண்ணில் பரப்பி, ஒரு அரசியல் இயக்கத்தின் கொள்கையாக மாற்றி ஆட்சியின் கொள்கையாகவும் அதனை ஆக்கிய பெருமை நீதிக்கட்சிக்கு உண்டு. அதை மிகச் சிறப்பாக செய்த தலைவர்களில் முக்கியமானவர். பி.டி.ராஜன் சொன்னார்.

திராவிட இயக்கத்தின் கொள்கையைப் பேச ஒரே ஒருவர் உறுதியோடு இருந்தால் போதும். அந்தக் கொள்கை வளர்ந்துவிடும் என்று. இன்றைக்கு ஒருவரல்ல, கோடிக்கணக்கானோர் திராவிடக் கொள்கைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்த பெருமக்களான தியாகராயர், டி.எம்.நாயர், நடேசனார், பனகல் அரசர், சௌந்தரபாண்டியனார், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோர் வரிசையில் போற்றத்தக்க பெருமகனாக விளங்கிய பி.டி.ராஜன் புகழ் வாழ்க அவரது கனவுகள் வெல்க என முழங்கி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீடு; நீதிக்கட்சியின் நீட்சி தான் இந்த ஆட்சி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dravidian ,Tamilavel P.D.Rajan ,Justice Party ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,DMK ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...