கொடைக்கானல்: கொடைக்கானலில் இரவில் மட்டுமே பூக்கும் அதிசய பிரம்ம கமலப் பூக்களை காணும் சுற்றுலாப் பயணிகள் போட்டோ, செல்பி எடுத்து மகிழ்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு கோடை சீசன் மற்றும் விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் களைகட்டும்.
தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வருகை தந்து இயற்கையை ரசித்துச் செல்வர். நகரில் மோயர் பாயிண்ட், பிரையன்ட் பூங்கா, குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் வனப்பகுதி, நட்சத்திர ஏரி என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை விட்ட நிலையில், கொடைக்கானலுக்கு தினசரி சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை காலங்களில் குவியும் சுற்றுலாப் பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இந்நிலையில், இமயமலை போன்ற பனிப்பிரதேசங்களில் பூக்கும் அதிசய பிரம்ம கமலப் பூக்கள் தற்போது கொடைக்கானலில் உள்ள தந்தி மேடு பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன. வெண்மை மற்றும் இளம்சிவப்பு நிறங்களில் பூத்து சுற்றுலாப் பயணிகளை கவருகிறது. இரவு நேரங்களில் மட்டுமே இம்மலர்கள் பூக்கும். இந்தப் பூக்களை நகரப் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
The post கொடைக்கானலில் இரவில் மட்டுமே மலரும் அதிசய பிரம்ம கமலப் பூக்கள் appeared first on Dinakaran.