*சிறுவன், ரவுடி கைது: மாடியிலிருந்து குதித்த ரவுடிக்கு கை முறிவு
மன்னார்குடி : மன்னார்குடியில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு சென்று நடுவழியில் அவரை மிரட்டி கூகுல்பே மூலம் பணம் பறித்த சிறுவன், ரவுடி கைது செய்யப்பட்டனர். போலீசிடமிருந்து தப்ப மாடியிலிருந்து குதித்தபோது ரவுடி கை முறிந்து காயமடைந்தான்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோட்டை சேர்ந்தவர் சந்தோஷ்(30). கும்பகோணத்தில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்துள்ளார்.
இவர் கடந்த 18ம் தேதி மன்னார்குடிக்கு பைக்கில் வந்தார். ரொக்க குத்தகை புதுரோடு அருகே வந்தபோது, இருவர் லிப்ட் கேட்பதுபோல் பைக்கில் ஏறினர். பாதி வழியில் இருவரும் திடீரென சந்தோஷை மிரட்டி பைக்கை ரயில்வே கேட் அருகே பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கட்டிடத்துக்கு ஓட்டிச்செல்லும்படி கூறி அங்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேலும் 5 பேரை அங்கு வரவழைத்து சந்தோஷை தாக்கி அவரிடமிருந்து செல்போனை பறித்து, கூகுல்பே ரகசிய எண்ணை கேட்டு அதிலிருந்த ரூ.8 ஆயிரத்தை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இந்த தகவலறிந்ததும் மன்னார்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சந்தோஷை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் மன்னார்குடி அடுத்த பாமணியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அபிலேஷ்(22) உள்ளிட்ட 7 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மன்னார்குடி- நீடாமங்கலம் சாலையில் முன்னாலிக்கோட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் அபிலேஷ் பதுங்கி இருப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் டிஎஸ்பி பிரதீப் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க வாலிபர் அபிலேஷ் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்தார்.
இதில் அவரின் இடது கையில் எலும்பு முறிந்தது. இதையடுத்து அபிலேஷை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனையும் மன்னார்குடி ரயில் நிலையத்தில் பிடித்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post மன்னார்குடியில் பைக்கில் லிப்ட் கேட்டு சென்று டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு appeared first on Dinakaran.