×

வழித்தட பிரச்னை, பட்டா கேட்டு கலெக்டர் ஆபிசில் ஒரே நாளில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வழித்தட பிரச்னை மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு, 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் சாமாண்டஅள்ளியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45), கூலி தொழிலாளி.

இவரது மனைவி சென்னம்மாள் (40). இவர்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் குடும்பத்திற்கும், நீண்ட காலமாக வழித்தட பிரச்னை உள்ளது. இதுகுறித்து போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், நேற்று கணவன், மனைவி இருவரும் கோரிக்கை மனு அளிக்க வந்தபோது, பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, உடலில் ஊற்றிக் கொண்டனர். இதை பார்த்த அங்கிருந்த போலீசார், அவர்களிடமிருந்து கேனை பறித்து, தண்ணீரை ஊற்றினர்.

பின்னர், கொண்டு வந்த மனுவை அதிகாரிகளிடம் கொடுக்க நடவடிக்கை எடுத்தனர். இருவரையும் கைது செய்து, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர், பிணையில் விடுவித்தனர்.

இதேபோல், பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த தொழிலாளி மாதப்பன்(70), தனது மனைவி மங்கம்மாளுடன் (56) நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது, மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை உடலில் மாதப்பன் ஊற்றினார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, கேனை பறித்தனர். பின்னர், அவர் மீது தண்ணீர் ஊற்றி விசாரித்தனர்.

இதில் 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருவதாகவும், அந்த நிலத்திற்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு அளித்தும், அதிகாரிகள் பட்டா தர மறுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மாதப்பன் வைத்திருந்த மனுவை பெற்று, அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. பின்னர், அவரை போலீசார் கைது செய்து, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, பிணையில் விடுவித்தனர்.

The post வழித்தட பிரச்னை, பட்டா கேட்டு கலெக்டர் ஆபிசில் ஒரே நாளில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Collector ,Sivakumar ,Morapur Samandalli ,Dharmapuri district ,Chennammal ,
× RELATED நெல்லை வண்ணார்பேட்டையில் புதிதாக அமைத்த சாலை 2 மாதங்களிலேயே சேதம்