திருச்செந்தூர் : திருச்செந்தூர், உடன்குடியில் கிணற்றுக்குள் விழுந்த ஆடு, பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர். முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் நீராடுவதும், இப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு திருப்பணி செய்த மூவர் சமாதுவில் சுவாமி தரிசனம் செய்வதும் வழக்கம்.
இந்த பிரசித்திப் பெற்ற மூவர் சமாது வளாகத்தில் உள்ள சுமார் 50 அடி ஆழமுள்ள கிணறு மூடி போட்டு மூடப்பட்டுள்ளது. இதில் சிறிய அளவிலான ஓட்டை இருந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இப்பகுதிக்கு சென்ற ஆடு, இந்த ஓட்டை வழியாக கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து பூஜகர் ஆறுமுகம் கொடுத்த தகவலின் பேரில், திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர் நீண்ட நேரம் போராடி கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டை பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை போராடி மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்களும், பக்தர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இதேபோல் உடன்குடி புதுமனை தெருவை சேர்ந்த கன்சல் ரகுமான் என்பவரது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் நல்ல பாம்பு விழுந்து கிடந்தது. இதுகுறித்து கார்த்திக், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து திருச்செந்தூர் தீயணைப்புநிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து சிவானந்தராம், கோகுல், முன்னணி தீயணைப்பு ராதாகிருஷ்ணன் மற்றும் வீரர்கள் வீரசெல்வன், மாரி, ஆனந்தராஜ், விநாயகமூர்த்தி, சுதாகர் மற்றும் அகஸ்டின் ஆகியோர் சென்று விலங்கு மீட்பு வலை மூலம் கிணற்றுக்குள் கிடந்த பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
The post திருச்செந்தூர், உடன்குடியில் கிணற்றில் விழுந்த ஆடு, பாம்பு மீட்பு appeared first on Dinakaran.
