×

நண்பர்களுடன் குளிக்க சென்றபோது விபரீதம் சங்கராபரணி ஆற்றில் மாயமான டிரைவர் சடலமாக மீட்பு

புதுச்சேரி, ஏப். 22: புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன் (33). டிரைவர். கடந்த 20ம் தேதி அன்புசெல்வன் மற்றும் அவரது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் அடுத்து சேந்தநத்தம், மங்களபுரி நகர் பகுதியில் செல்லும் சங்கராபரணி ஆற்றங்கரையில் குளித்துள்ளனர். அப்போது அன்புசெல்வன் ஆற்றில் நீச்சல் அடித்தவாறு மறுகரைக்கு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தபோது திடீரென அன்புசெல்வன் நீரில் மூழ்கி மாயமானார். இதை பார்த்த கரையோரம் குளித்துக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் அன்புசெல்வனை மீட்க ஆழமான பகுதிக்கு சென்று தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே தீயணைப்பு துறை மற்றும் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் ஆழமான பகுதிக்கு சென்று தேடினர். தொடர்ந்து மீனவர்களை அழைத்து மீன்பிடி பைபர் படகு மூலம் ஆற்றில் தேடும் பணியில் இறங்கினர். நேற்று முன்தினம் இரவு வரை மாயமானவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்புசெல்வன் உயிரிழந்த நிலையில் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post நண்பர்களுடன் குளிக்க சென்றபோது விபரீதம் சங்கராபரணி ஆற்றில் மாயமான டிரைவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Shankaraparani river ,Puducherry ,Anbuselvan ,Mettupalayam ,Shankaraparani river bank ,Villianur ,Senthanatham ,Mangalapuri Nagar ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா