விருதுநகர், ஏப்.18: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடைபெறுவது சட்டப்படி குற்றம். குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை 1098 அல்லது 181ல் புகார் தெரிவிக்கலாம். 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை திருமணம் செய்யும் ஆணுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை, ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டால் காரணமான நபருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 30 வரை 14 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயது நிறைவடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக 14 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post விருதுநகர் மாவட்டத்தில் 14 குழந்தை திருமணங்கள் வழக்குப்பதிவு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.
