திருமங்கலம், ஏப். 18: திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையத்தினை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கோவிந்தராஜ்(29). இவர் கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் பேக்கரி வைத்து நடத்தி வந்தார். சித்திரை மாத பிறப்பையொட்டி கோவிந்தராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான ராயபாளையத்திற்கு வந்தார். நேற்று மாலை இதே கிராமத்தினை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் கிராமத்திலுள்ள எம்ஜிஆர் ஊரணி பகுதியில் மது அருந்தியுள்ளார். சில நண்பர்கள் மது அருந்திய பின்பு புறப்பட்டு சென்றனர். மேலும் சிலர் கோவிந்தராஜ் உடன் மீண்டும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கோவிந்தராஜ் தலையில் மதுபாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏற்கனவே சென்ற நண்பர்கள் நீண்ட நேரமாக கோவிந்தராஜ் வராததால் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அவர் இறந்து கிடப்பதை பார்த்து திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கோவிந்தராஜ் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவருடன் இணைந்து மது அருந்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராயபாளையம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post திருமங்கலம் அருகே பேக்கரி அதிபர் படுகொலை appeared first on Dinakaran.
