×

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஜகஜால கில்லாடி பட தயாரிப்புக்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடன் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை திருப்பித் தரக் கோரிய வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் துஷ்யந்தின் தந்தை ராம்குமார், அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமைதாரர் பிரபு. அந்த வீட்டின் மீது ராம்குமாருக்கு எந்த தொடர்பும் இல்லை. நீதிமன்றம் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து உத்தரவு பிறப்பித்ததற்கு வெகு காலம் முன்பே அந்த வீட்டை நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் பிரபுவுக்கு உயிர் எழுதி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் பத்திரப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதனால் நீதிமன்றம் ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல கோடி ரூபாய் மதிப்பிலான 22 கிரவுண்ட் பரப்பில் அமைந்துள்ள அன்னை இல்லம் வீட்டில் ராம்குமார் தனது உரிமையை விட்டுக் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை. சொத்து உரிமை நடிகர் பிரபுவுக்கு இருக்கிறதா என்பதை முழு விசாரணைக்குப் பிறகு முடிவு செய்ய முடியும் என்பதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி
வைத்தார்.

The post நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Prabhu ,Sivaji Ganesan ,Chennai ,
× RELATED ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி...