×

கடந்த ஆட்சி காலத்தில் நடந்த டாஸ்மாக் முறைகேடு குறித்து விசாரிக்க இப்போதுதான் அமலாக்கத்துறைக்கு ஞானம் வந்ததா?.. ஐகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு வாதம்

சென்னை: கடந்த ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரிக்க இப்போதுதான் அமலாக்கத்துறைக்கு ஞானம் வந்ததா என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்க துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மற்றும் ஆகியோர் வாதிட்டனர். அவர்கள் வாதிடும்போது, அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் 2021 வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன்?. என்று கேட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிப்பது தானே அரசின் நோக்கம் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனை மாநில அரசு கவனித்துக்கொள்ளும் அமலாக்கத்துறை அல்ல என்றார். இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ தனது வாதத்தை தொடங்கினார். அவர் வாதிடும்போது, டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளன.

குறிப்பிட்ட முறையில் தான் விசாரணை நடத்த வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றாலும் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை மறைப்பதும் குற்றம் தான். சம்பந்தப்பட்ட நபர் ஊழல் தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக இல்லை என்றாலும் சாட்சியாக அவரை சேர்க்கலாம் என்று வாதிட்டார். அமலாக்கத்துறையின் வாதம் நிறைவடையாததையடுத்து விசாரணை இன்றும் தொடரவுள்ளது. விசாரணையின்போது, டாஸ்மாக் ஊழியர்கள் மீது தமிழ்நாடு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல் அறிக்கைகளை நீதிபதிகளிடம் அமலாக்கத்துறை சிறப்பு குற்றவியல் வக்கீல் என்.ரமேஷ் வழங்கினார். அத்துடன், டாஸ்மாக் சோதனை தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார்.

டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் முடிந்து விட்டதால், வரும் 22ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு பாஜக பிரமுகர் ஏ.மோகன்தாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். வழக்கு விசாரணையின்போது, தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கார்த்திக் ரகுநாத் என்பவர் மனுதாக்கல் செய்தார். அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, அமலாக்கத்துறை தொடர்பான இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரும்போது, நான் எம்.பியாக இருந்தேன். அப்போதே இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அது எதிர்கட்சிக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று கூறினேன். இப்போது இது நிரூபணமாகியுள்ளது.

அதனால் இந்த வழக்கில் என் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், இதுகுறித்து தங்கள் முடிவை பின்னால் அறிவிப்பதாக கூறினார். ஆனால், மூத்த வழக்கறிஞர் ஜோதி, எப்போது முடிவை அறிவிப்பீர்கள்? என்று தொடர்ந்து கேட்க, நீதிபதிகளும் பின்னர் தெரிவிப்பதாக கூறினர். ஒரு கட்டத்தில், இந்த விஷயத்தில் உறுதியான பதிலை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். என்னுடைய கருத்தை இந்த வழக்கில் கேட்கவில்லை என்றால், பொதுமக்களின் கருத்தை இந்த உயர் நீதிமன்றம் கேட்க தயாராக இல்லை என்ற வேதனையுடனும், கனத்த இதயத்துடனும் இந்த நீதிமன்ற அறையை விட்டு வெளியே செல்வேன் என்றார். அதற்கு நீதிபதிகள், தங்களது தரப்பு முடிவை விரைவில் தெரிவிப்பதாக கூறினர்.

The post கடந்த ஆட்சி காலத்தில் நடந்த டாஸ்மாக் முறைகேடு குறித்து விசாரிக்க இப்போதுதான் அமலாக்கத்துறைக்கு ஞானம் வந்ததா?.. ஐகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Tamil Nadu government ,Court ,Chennai ,High Court ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...