×

அரசின் அனைத்து அறிவிப்புகளும் இனி தமிழில் மட்டுமே வெளியிடப்படும்; அரசுப்பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்து போடவேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: அரசுப் பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்து போட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்; இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அரசுப் பணியாளர்களுக்கும் தமிழ் கட்டாயம் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் என்பது மக்கள் தங்களது கருத்துக்களைத் தடையில்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் 1956ம் ஆண்டு இயற்றப்பட்டு, 1957ம் ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிப்பட்டது.

ஆனால், பெயர்ப்பலகைகள் மற்றும் கடிதங்களில் தமிழ் இடம் பெறவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், அரசுப்பணியாளர்கள் கையொப்பம் தமிழிலேயே இருக்க வேண்டும் எனவும், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்தவும் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அறிவிக்கை விவரம்:

* அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்.
* சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.
* துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.
* வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதப் போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாமல், அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும்,
* அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
* ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச்செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்ய அனுப்பி வைக்க வேண்டும்.
* அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்படின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசின் அனைத்து அறிவிப்புகளும் இனி தமிழில் மட்டுமே வெளியிடப்படும்; அரசுப்பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்து போடவேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...