×

வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ எதிரிகளின் டிரோன்களை நொடிக்குள் அழிக்கும் நவீன ‘லேசர்’ ஆயுதம்: அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா

கர்னூல்: ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஆந்திர மாநிலம் கர்நூலில் உள்ள தேசிய திறந்தவெளி சோதனைத் தளத்தில் மார்க்-II (ஏ) லேசர் – இயக்கு ஆற்றல் ஆயுத அமைப்பை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் சிறிய எறிபொருட்களை அழிக்கும் வகையில், இந்த லேசர் தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், உயர் சக்தி கொண்ட லேசர் ஆயுதங்களைக் கொண்ட நாடுகளின் பிரத்யேக பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. மார்க்-2 அமைப்பு தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி, நீண்ட தூரத்தில் இருந்த டிரோனைத் தாக்கியதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட டிரோன் தாக்குதல்களையும் முறியடித்து அழித்தது. இந்த அமைப்பு இலக்குகளைச் சில நொடிகளில் அழிக்கும் திறன் கொண்டது. இது மிகவும் சக்திவாய்ந்த எதிர் – டிரோன் அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்தச் சோதனை இந்தியாவின் பாதுகாப்புத் திறனில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த ஆயுதத்திற்கு எம்.கே-2(ஏ) லேசர் டைரக்டட் எனர்ஜி வெப்பன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இந்தத் தொழில்நுட்பத்தை கொண்டுள்ள நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் இந்த ஆயுதம் இந்தியப் பாதுகாப்புப் படைகளில் இணைக்கப்படும்.

எதிர்காலத்தில், இந்தியா 300 கிலோவாட் திறன் கொண்ட ‘சூர்யா’ என்ற லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பையும் உருவாக்க உள்ளது. இது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆயுதங்களைக் கூட தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். தெலங்கானாவின் ஐதராபாதில் உள்ள டி.ஆர்.டி.ஓ.,வின் உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையம் இந்த ஆயுதத்தை உருவாக்கியது. தற்போது ஆந்திராவின் கர்னுாலில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

The post வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ எதிரிகளின் டிரோன்களை நொடிக்குள் அழிக்கும் நவீன ‘லேசர்’ ஆயுதம்: அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : DRDO ,India ,America, China, Russia ,Kurnool ,Union government ,Defence Research and Development Organisation ,National Open Range Test Range ,Kurnool, Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...