சென்னை: தமிழகத்தின் டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய டிஜிபி யார் என்ற பரபரப்பு காவல்துறையில் எழுந்துள்ளது. யார், யாருக்கு வாய்ப்பு, அரசின் விதிமுறைகளுக்குள் யார், யார் வருவார்கள் என்ற கூட்டல், கழித்தல் கணக்குகளால் காவல்துறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட திரிபாதி, சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டார். அவரது ஓய்வுக்குப் பிறகு சைலேந்திரபாபு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவர் 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.
அவருக்குப் பதிலாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். வழக்கமாக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுகிறவர் 2 ஆண்டுகள் முழுமையாக பணியில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பார்த்தால் அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் 30ம் தேதியுடன் முடிந்துவிடும். ஆனால். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், 1965 ஆகஸ்ட் 14ம் தேதி பிறந்தார். 1990ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழக பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டார். வயது நிறைவுப்படி பார்த்தால், அவரது பணி வருகிற ஆகஸ்ட் மாதம்தான் நிறைவடையும்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அசோக்குமார் என்பவர் டிஜிபியாக இருந்தார். திடீரென அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் பதவியை விட்டு விலகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் பதவி விலகினார். இதனால் உளவுத்துறை டிஜிபியாக இருந்த ராமானுஜத்திற்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் -ஒழுங்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டது. அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். ராமானுஜத்திற்கு பொறுப்பாக சட்டம் -ஒழுங்கு பதவி வழங்கப்பட்டதால், அவர் 2 ஆண்டுகள் வரை பணியில் நீடிக்கும் வாய்ப்பு இல்லை. இதனால் ஒன்றரை ஆண்டுகளில் ஓய்வுபெறும் நிலை வந்தது.
ஆனால், அவர் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் 62 வயது வரை பணியில் இருந்தார். சட்டம் -ஒழுங்கு பணியில் மேலும் 2 ஆண்டுகள் பணியாற்றினார். சட்டத்தை பலர் இதுபோல தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்ததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுகிறவர்கள் குறித்த சில வரையறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்து அளித்தது. இதனால், ஒரு டிஜிபியாக நியமிக்கப்படுகிறவர், டிஜிபி பட்டியல் தயாரிக்கும் நேரத்தில், ஓய்வு பெறுவதற்கு குறைந்தது 6 மாதமாவது இருக்க வேண்டும். அவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கக் கூடாது.
சட்டம்- ஒழுங்கு பணியில் நீண்ட நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்று கூறியது. வழக்கமாக டிஜிபிக்கு தகுதியானவர்களில் 3 பேர் பட்டியலை தயாரித்து, மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும். இந்த பட்டியலில் இருந்து ஒருவரை ஒன்றிய அரசு தேர்ந்தெடுக்கும். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு சிறப்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசு நினைத்தால், 5 பேரை வரை தேர்வு செய்து, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க முடியும்.
5 பேர் பட்டியல் இருந்து தகுதியான 3 பேர் பட்டியலை தயாரித்து மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அனுப்பி வைக்கும். 3 பேரில் இருந்து ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமிக்க முடியும். தற்போது தமிழகத்தில் டிஜிபியாக சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னியபெருமாள், சைலேஷ்குமார் யாதவ், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வாங்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகிய 10 பேர் உள்ளனர். அதில் சஞ்சய் மாத்தூர், மகேஷ்குமார் அகர்வால் ஆகிய 2 பேர் ஒன்றிய அரசுப் பணியில் உள்ளனர். மற்ற 8 பேரும் தமிழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்திற்கு 5 பேர்தான் டிஜிபி அந்தஸ்தில் இருக்க முடியும். இதனால் சீனியாரிட்டிப்படி கடைசியாக உள்ள சைலேஷ்குமார் யாதவ், வெங்கட்ராமன், வினித்தேவ் வாங்கடே ஆகிய 3 பேரும் சிறப்பு டிஜிபியாக உள்ளனர். அதில் சீமா அகர்வால், சங்கர் ஜிவாலுடன் 1990ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர். 1991ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற அம்ரேஷ் பூஜாரி, ரவி, ஜெயந்த் முரளி, கருணா சாகர், மஞ்சுநாதா ஆகிய 5 பேரும் ஓய்வு பெற்று விட்டனர். 1992ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னியப்பெருமாள் ஆகியோர் சீமா அகர்வாலுடன் சேர்ந்து ெரகுலர் டிஜிபியாக பணியாற்றி வருகின்றனர்.
இதனால் தமிழக அரசின் சிறப்பு ஆணையின்படி 5 பேர் பட்டியலை தேர்வு செய்ய முடியும் என்பதால், தற்போது சீனியாரிட்டியில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னியப்பெருமாள் ஆகிய 5 பேரை தேர்வு செய்து, ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். அதேநேரத்தில் பட்டியல் அனுப்பும் நேரத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் இருக்க வேண்டும்.
அதன்படி பார்த்தால், தற்போது ரெகுலர் டிஜிபியாக உள்ள சீமா அகர்வால் முதல் வன்னியபெருமாள் வரை 5 பேரையும் மாநில அரசு பட்டியல் தயாரித்து அனுப்ப முடியும்.
பட்டியலை முன்கூட்டியே தயாரித்து அனுப்ப வேண்டும். இதனால் ஜூன் மாதம் பட்டியல் தயாரிக்கப்பட்டால் தற்போது ரெகுலர் டிஜிபியாக உள்ள 5 பேருமே பட்டியலில் இடம்பிடிக்க முடியும். ஆகஸ்ட் மாதம் அதாவது சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் மாதத்தில் பட்டியல் தயாரிக்கப்பட்டால், அபய்குமார் சிங் இடம்பெறுவது கடினமாகிவிடும். ஆனால் எப்போதுமே கடைசி நேரத்தில் மாநில அரசு பட்டியல் தயாரிக்க மாட்டார்கள். வருகிற ஜூன் மாதம் பட்டியல் தயாரித்தால் 5 பேருமே இடம்பெறுவார்கள். இந்த 5 பேரை ஒன்றிய அரசு பரிசீலனை செய்யும்.
ஆனால் மாநில அரசு ஜூன் மாதம் பட்டியல் தயாரிக்காமல் காலதாமதம் செய்து, ஆகஸ்ட் மாதம் பட்டியல் தயாரித்தால், அபய்குமர் சிங், பட்டியலில் இடம்பெறுவது கஷ்டமாகிவிடும். இதனால் 5வது இடத்தில் உள்ள வன்னியப்பெருமாள் இடம் பெறுவார். அவரும் சட்டம் -ஒழுங்கு பணியில் நீண்ட காலம் பணியாற்றாததால், அவர், 3 பேர் பட்டியலில் தேர்வு செய்யப்படுவது கடினமாகிவிடும். இதனால் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 2 பேர் மட்டுமே தகுதி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
இதனால், தகுதி வாய்ந்த பட்டியல் தயாரிக்கப்பட வேண்டுமானால் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், வருகிற ஜூன் மாதம் பட்டியல் தயாரித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை உயர் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதில் சீமா அகர்வால், தற்போது தீயணைப்புத்துறையின் இயக்குநராகவும், சந்தீப் ராய் ரத்தோர் ேபாலீஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குநராகவும், அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். அதில், சீமா அகர்வால் கடந்த சில ஆண்டுகளாக முக்கியமான பதவிகளில் இல்லாமல் இருந்தார்.
தற்போதுதான் தீயணைப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். சந்தீப் ராய் ரத்தோர், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், படுகொலையை கண்டுகொள்ளாமல் விட்டதற்காகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தவறிவிட்டார் என்ற காரணங்களுக்காக மாற்றப்பட்டு, போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குநராக மாற்றப்பட்டார்.
அதேநேரத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக உள்ள அபய்குமார் சிங், எந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாமல், நேர்மையாகவும், சிறப்புடனும் பணியாற்றி வருகிறார். இதனால் இந்த 3 பேரில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய, தமிழக அரசால் முடியும் என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள். எப்படியோ போலீஸ் அதிகாரிகளின் கூட்டல், கழித்தல் கணக்குகளால் போலீஸ் வட்டாரத்தில் டிஜிபி பதவி குறித்து பரபரப்பாக அலசப்பட்டு வருவது மட்டும் உண்மை.
* பரிசீலனை கூட்டத்தில் யார், யார்?
இந்த பரிசீலனை கூட்டத்தில், தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் இடம் பெறுவார்கள். ஒன்றிய அரசின் சார்பில், உள்துறைச் செயலாளர், பணியாளர் நலத்துறைச் செயலாளர்கள் இடம்பெறுவார்கள். அந்த ஆலோசனையில் சீமா அகர்வால், சட்டம் -ஒழுங்கு பணியில் பணியாற்றியுள்ளதால், அவர் தகுதி பெற்று விடுவார். அடுத்த இடத்தில் உள்ள ராஜீவ்குமார், ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் குறைந்த காலம்தான் சட்டம் -ஒழுங்கு பணியில் இருந்தார்.
இதனால் அவர் தகுதி பெற மாட்டார். அடுத்த இடத்தில் உள்ள சந்தீப் ராய் ரத்தோர், தேர்வு பெறுவார். 4வது இடத்தில் உள்ள அபய்குமார் சிங்கும், சட்டம்- ஒழங்கு பணியில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இதனால் அவரும் 3வது டிஜிபியாக இடம்பெறுவார். இந்த 3 பேர் தகுதியானவர்கள் என்பதால், அவர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த 3 பேரில் இருந்து ஒருவரை சட்டம் -ஒழங்கு டிஜிபியாக மாநில அரசு தேர்வு செய்யும்.
The post சங்கர் ஜிவால் ஓய்வுபெற உள்ள நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? கூட்டல், கழித்தல் கணக்குகளால் போலீசில் பரபரப்பு appeared first on Dinakaran.
