×

எம்.சி.ராஜா கல்லூரிக்கு 10 மாடியில் புதிய மாணவர் விடுதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: அம்பேத்கர் 135வது பிறந்தநாளான சமத்துவ நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44 கோடியே 50 லட்சம் செலவில் தரை மற்றும் 10 தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், ரூ.227 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான 18 விடுதி கட்டிடங்கள், 46 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, 19 சமுதாய நலக்கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 1000 பழங்குடியினர் குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 49,542 பயனாளிகளுக்கு ரூ.104 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோர் வழங்கினர். விழா மேடையில் தமிழாக்கம் செய்யப்பட்ட அம்பேத்கர் படைப்புகளான ‘சாதியை அழித்து ஒழித்தல், இந்து மதத்தின் புதிர்கள்’ ஆகிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட பிரகாஷ் அம்பேத்கர் பெற்றுக்கொண்டார். வன உரிமை சட்டத்திற்கான வரைபடத்தை முதல்வர் வெளியிட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மதிவேந்தன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, மேயர் பிரியா, எம்பிக்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் தலைமையில் இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

* சென்னை மாகாணத்தின் முதல் நியமன உறுப்பினர் எம்.சி.ராஜா
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த சமத்துவ நாள் விழாவில் எம்.சி. ராஜா பெயரில் அமைந்த விடுதிக் கட்டிடம் குறித்து முதல்வர் பேசியதாவது: இந்த விழாவுக்கு வருவதற்கு முன்னால், சைதாப்பேட்டையில் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்.சி.ராஜா பெயரில் அமைந்திருக்கும் மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் முதலாவது உறுப்பினர் எம்.சி.ராஜா. அவர்தான் பட்டியலின மக்களின் துயரங்களை முதன்முதலாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றவர்.

அயோத்திதாச பண்டிதர் மறைவுக்கு பிறகு, சென்னை ஆதிதிராவிடர் மகாஜன சபையை சீரமைத்து நடத்தியவர். நீதிக்கட்சியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமான ஒருவர். 1927ம் ஆண்டே ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டவர். 1937ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அத்தகைய பெருந்தலைவரின் பெயரால் அமைந்திருக்கின்ற அந்த விடுதி, லட்சியத்துடன் படித்து முன்னேற பாடுபட்டவர்களுக்கான இடமாக இருந்திருக்கிறது.

The post எம்.சி.ராஜா கல்லூரிக்கு 10 மாடியில் புதிய மாணவர் விடுதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : M.C. Raja College ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Ambedkar ,Equality Day ,Saidapet ,Adi Dravidian and Tribal Welfare Department ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...