×

மெரினா-திருமயிலை வரை சுரங்கம் அமைக்கும் பணி இயந்திரங்களின் கட்டர்ஹெட் பழுது: செப்டம்பரில் பணிகள் முடியும் என அதிகாரிகள் தகவல்

சென்னை: கடினமான பாறைகளால் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களில் கட்டர் ஹெட் பழுது ஏற்படுகிறது. இதனால் பிளமிங்கோ இயந்திரம் வரும் செப்டம்பர் மாதத்தத்தில் திருமயிலை வந்தடையும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 4வது வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை பிளமிங்கோ என பெயரிடப்பட்ட இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கலங்கரை விளக்கத்திலிருந்து கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி பிளமிங்கோ இயந்திரம் பணியை தொடங்கியது. 2வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான கழுகு 2024ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி சுரங்கம் தோண்ட தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் திருமயிலை, பாரதிதாசன் சாலை வழியாக போட் கிளப் வரை செல்கிறது. இதில் பிளமிங்கோ இயந்திரமானது வரும் செப்டம்பர் மாதத்தில் திருமயிலையை கடக்கும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை 1.96 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கப்படும். இந்த பிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் கச்சேரி சாலை வழியாக திருமயிலை வரும் செப்டம்பர் மாதம் வந்தடைய உள்ளது. அதேபோல் கழுகு சுரங்கம் தோண்டும் இயந்திரம் கச்சேரி சாலை நிலையத்துக்குள் நுழைவதற்காக தயார் நிலையில் உள்ளது.

அதன்படி பிளமிங்கோ, கழுகு ஆகிய சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடுத்தடுத்து சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் இந்த பகுதியில் உள்ள நிலத்தின் தரமானது மண் மற்றும் பாறைகளாக உள்ளது. இதனால் பிளமிங்கோ இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியில் பல்வேறு பிரச்னைகள் சந்திக்க நேரிட்டது. அதாவது கடினமான பாறைகளால் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முக்கிய பகுதியான கட்டர் ஹெட் அடிக்கடி பழுது ஏற்பட்டது.

அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்சைட் உள்ளிட்ட வாயுகள் வெளியேறியதால் சுரங்கம் தோண்டும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் பிளமிங்கோ இயந்திரமானது தற்போது வரை 1.3 கிலோ மீட்டரும், கழுகு இயந்திரம் 1.2 கிலோ மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. அதன்படி பிளமிங்கோ இயந்திரம் வரும் செம்படம்பர் மாதம் திருமயிலை பகுதியை அடையும். இவ்வாறு மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

The post மெரினா-திருமயிலை வரை சுரங்கம் அமைக்கும் பணி இயந்திரங்களின் கட்டர்ஹெட் பழுது: செப்டம்பரில் பணிகள் முடியும் என அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Marina-Miss ,Chennai ,Metro ,Marina-MS ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...