×

பொய் புகார் என விசாரணையில் தெரிந்ததால் இணை கமிஷனர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: பொய் புகார் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரிந்த நிலையில், காவல்துறை இணை ஆணையர் மகேஷ்குமார் சஸ்பெண்ட் உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார் மீது கடந்து பிப்ரவரி மாதம் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் ரீதியாக சில தினங்களாக தனக்கு தொந்தரவு கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படாமல் அன்றைய தினமே மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் புகார் அளித்த பெண்ணுக்கும் தனது கணவருக்கும் ஏற்கெனவே பழக்கம் இருப்பதாகவும், புகார் கொடுப்பதற்கு முந்தைய நாள் கூட இருவரும் ஓட்டலில் சந்தித்து பேசியதாகவும் இணை ஆணையர் மகேஷ்குமார் மனைவி தெரிவித்திருந்தார்.

மேலும் தனிப்பட்ட காரணங்களுக்கு அவர் மீது புகார் அளித்ததாகவும், தனது கணவரை மிரட்டும் நோக்கில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விசாகா கமிட்டி மேற்கொண்ட விசாரணையில் பெண் காவல் உள்நோக்கத்துடன் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெண் காவலர் புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

மேலும் விசாக கமிட்டி இந்த புகாரில் இதற்கு மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என டிஜிபிக்கு அறிக்கை அளித்தது. இதையடுத்து டிஜிபி சங்கர் ஜிவால், இணை ஆணையர் மகேஷ் குமாரின் பணி இடைநீக்கத்தை திரும்ப பெறவும் அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில் இணை ஆணையர் மகேஷ்குமாரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

The post பொய் புகார் என விசாரணையில் தெரிந்ததால் இணை கமிஷனர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: தமிழக அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Commissioner ,Mahesh Kumar ,North Zone ,Joint Commissioner ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...