×

தமிழ்நாட்டு மாணவர்களிடையே நிலவும் ஆரோக்கியமான கல்விச்சூழலை சிதைக்கும் வகையில் பேசுவதா? ஆளுநருக்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனம்

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு உதவி பெறும் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் ஆளுநர் ஆ.என்.ரவி பங்கேற்ற ‘கம்பர் 2025 விழா நடந்தது. கல்லூரி விடுமுறை நாளன்று எந்தவித முன் அறிவிப்புமின்றி திடீரென கல்லூரி முதல்வர் வாயிலாக அந்த நிகழ்ச்சிக்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், துறைக்கு 60 மாணவர்கள் என்று 9 துறைகளிலிருந்து கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் 45 ஆசிரியர்களும் துறைத் தலைவர்களுமாக மொத்தம் 600க்கும் மேற்பட்டோரை, கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தி இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாது, 6 மணிக்கு தொடங்குகிற நிகழ்ச்சிக்காக, பிற்பகல் 2 மணிக்கே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அரங்கில் கொண்டுவந்து அடைத்ததோடு, கிட்டத்தட்ட 4 மணி நேரம் குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்காமல், இயற்கை உபாதைகளுக்குக்கூட வெளியே செல்ல அனுமதிக்காமல், அடைத்துவைத்து அந்த அரங்கை வதை முகாமை போல மாற்றி வைத்திருந்திருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் உச்சம் வைத்தது போல நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவியோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசியதோடு, இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எதிராக வகுப்பு வாதத்தைத் துண்டும் விதமாகவும் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலும் சனாதனத்தை வலியுறுத்தியும் அங்கே இருந்தவர்கள் அனைவரின் முகம் சுழிக்கும் வகையில் வெறுப்பைக் கக்கியிருக்கிறார். கூடவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் போடவைத்து அநாகரிமாக நடந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நிலவும் மாணவர்களிடையே ஆரோக்கியமான கல்வி சூழலைச் சிதைக்கும் வகையில் பேசியிருக்கிறார் ஆர்.என்.ரவி. அதற்கு மேடை அமைத்து கொடுத்திருக்கிறது தியாகராசர் கல்லூரி நிர்வாகம். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டு மாணவர்களிடையே நிலவும் ஆரோக்கியமான கல்விச்சூழலை சிதைக்கும் வகையில் பேசுவதா? ஆளுநருக்கு திமுக மாணவர் அணி கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,Chennai ,R. Rajiv Gandhi ,Governor ,A.N. Ravi ,Kambar 2025 ,Madurai Thiagarajar Engineering College ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...