×

சிறுவன் உயிரை பறித்த நார்த்தாமலை துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டது!: ஐகோர்ட்டில் கிளையில் தமிழக அரசு தகவல்..!!

சென்னை: புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இனிவரும் காலங்களிலும் அந்த தளம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற கிளையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த சுரேஷ் கண்ணா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், தமிழக காவல்துறை மொத்தமாக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் குறைந்தபட்சம் ஒரு துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையம் இருக்கும். அந்த தளங்களில் துப்பாக்கிச்சுடும் பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அதற்கான பொறுப்பு அதிகாரியின் கடமை. இப்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக அது தொடர்பான எச்சரிக்கையும் சுற்றவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழக காவல்துறையும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து நார்த்தாமலை துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தை பயன்படுத்தி வருகின்றனர். டிச.31 அன்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டபோது, பயிற்சி மையத்தில் இருந்து பறந்து சென்ற ஒரு குண்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் பாய்ந்தது. தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். விதிப்படி பயிற்சி காவலர்கள் அதிக திறன் வாய்ந்த துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தக்கூடாது. எனவே புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் தமிழ்நாடு அரசு தரப்பில், கடந்த டிசம்பர் 30ம் தேதியே புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அத்தளம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது. அரசின் அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்….

The post சிறுவன் உயிரை பறித்த நார்த்தாமலை துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டது!: ஐகோர்ட்டில் கிளையில் தமிழக அரசு தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Northamala shooting training center ,Tamilnadu government ,Chennai ,Tamil Nadu government ,Pudukottai Northamalai Shooting Training Center ,Northamalai Shooting Training Center ,iCourt ,
× RELATED கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும்...