×

உணவு உட்கொள்ளவும், இயற்கை உபாதைகள்கழிக்க செல்லவும் அனுமதிக்க சாத்தியமில்லை: ரயில் ஓட்டுநர்களுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே நிர்வாகம்

சென்னை: ரயில் ஓட்டுநர்கள் உணவு உட்கொள்ளவும், இயற்கை உபாதைகள் கழிக்க செல்லவும் அனுமதிப்பது சாத்தியமில்லை என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்கள் ரயில் எஞ்சின்களை இயக்கி வருகின்றனர். அவ்வாறு இயக்கும் போது ரயில் எஞ்சினில் கழிவறை வசதி செய்யப்படாததால் ரயில் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் பெண் ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதில் பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். பல மணி நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் பிரச்னை ஏற்படுகிறது.தற்போது இடைநில்லா ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பெண் ரயில் ஓட்டுநர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் இந்த பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும், ரயில் ஓட்டுநர்கள் உரிய இயற்கை உபாதைகளை கழிக்காததால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். ரயில் எஞ்சின்களில் கழிப்பறை இல்லாததால் சிறுநீர் கழிக்க முடியாது என்ற அச்சத்தில் ஓட்டுனர்கள் போதிய அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதில்லை.

இதனால் பெரும்பாலான ரயில் ஓட்டுனர்களுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்படுகிறது. வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல் பிரச்னைகள் முன்னதாகவே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. ரயில் ஓட்டுநர்களுக்கு சிக்னல்கள் மிக முக்கியமானது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில் 33 நொடிகளுக்கு ஒரு சிக்னலை கடந்து செல்கிறது. ஆனால் மன அழுத்தம் காரணமாக ஓட்டுனர்கள் அந்த சிக்னல்களை தவற விடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ரயில் எஞ்சின்களில் கழிப்பறைகள் இல்லாததால் பெரும்பாலான ரயில் ஓட்டுநர்கள் மனநலக் கோளாறுக்கு ஆளாகின்றனர். இது குறித்து ஐசிஎப் பொறியாளர் ரமேஷ் தெரிவிக்கையில்: தற்போது தயாரிக்கப்படும் ரயில் எஞ்சின்களில் கழிப்பறை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பஞ்சாப்,வாரணாசி, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள ரயில் தொழிற்சாலையில் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

கடந்த 2 வருடங்களாக தயாரிக்கப்படும் எஞ்சின்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார். ஆனால், இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. பல முறை இது குறித்து ரயில் ஓட்டுநர்கள் வலியுறுத்தியும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மேலும், ரயில் ஒட்டுநர்கள் இயற்கை உபாதை கழிக்க இடைவேளை கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்,அதே சமயம் தெற்கு ரயில்வே பொறுத்தவரை வெறும் 10% ரயில் எஞ்சின்களில் கூட கழிப்பறை வசதி அமைத்து கொடுக்கப்படவில்லை. இந்நிலையில்,ரயில் ஓட்டுநர்களுக்கு உணவு உட்கொள்ளவும், இயற்கை உபாதைகள் நிமித்தமாகச் செல்லவும் இடைவேளை வழங்க சட்டமியற்றுவது செயல்பாட்டு ரீதியாக சாத்தியமில்லை என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

பணியில் இருக்கும்போது உணவு உட்கொள்வதற்கும் கழிப்பறை செல்லவும் இடைவேளை வழங்க வேண்டும் என்று ரயில் ஓட்டுநர்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். ரயில் விபத்துக்கள் நிகழாமல் தடுக்க இதுவும் முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ரயில் ஓட்டுநர்களின் இந்த கோரிக்கையை இந்திய ரயில்வே நிராகரித்துள்ளது.ரயில் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ரயில்வே வாரியத்தின் ஐந்து நிர்வாக இயக்குநர்கள், ரயில்வேயின் ஆராய்ச்சிப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பின் ஐந்து நிர்வாகக் குழுவினர் ஆகியோர் இதில் பங்குபெற்று, தங்கள் பரிந்துரைகளை ரயில்வே வாரியத்துக்கு வழங்கி உள்ளனர்.

The post உணவு உட்கொள்ளவும், இயற்கை உபாதைகள்கழிக்க செல்லவும் அனுமதிக்க சாத்தியமில்லை: ரயில் ஓட்டுநர்களுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Railway Board ,Railway Administration ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...