- பாஜக
- புது தில்லி
- தில்லி
- தேசிய ஜனாதிபதி
- ஜேபி நட்டா
- மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான
- கிரண் ரிஜிஜு…
- தின மலர்
புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவை விளக்கும் விதமாக பாஜ சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. டெல்லியில் பாஜ சார்பில் நேற்று நடந்த பயிலரங்கில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் ஒன்றிய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டனர். மேலும் பாஜ ஆளும் மாநிலங்களை சேர்ந்த வக்பு வாரிய உறுப்பினர்கள், சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, “வக்பு வாரிய திருத்த மசோதா ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் நலனுக்காக வக்பு சொத்துகளை பயன்படுத்த உதவும். வக்பு வாரிய சொத்துகளை செல்வாக்கு மிக்கவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, சிறுபான்மை சமூகமும் அவற்றை பயன்படுத்த உதவும்” என்றார். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், “முஸ்லிம்கள் தங்கள் மத விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமைகளில் சட்டம் தலையிடுகிறது என்பது பொய்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் வக்பு மேலாண்மை மற்றும் நலத்திட்டங்களில் பின்தங்கிய முஸ்லிம்களையும், பெண்களையும் பங்குதாரர்களாக சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. வக்பு கவுன்சில் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்ப்பது சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பானது. அதற்கும், மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.
The post வக்பு திருத்த மசோதாவை விளக்க ஏப்ரல் 20 முதல் மே 5 வரை நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரம்: பாஜ அறிவிப்பு appeared first on Dinakaran.
