×

கோடை கால மின்தேவைக்காக வெளி சந்தையில் இருந்து 7,915 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி: தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் வணிகம் பெருகி வருவதால் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே 2ம் தேதி எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டின் மின் தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. தமிழக மின் வாரியத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் தவிர்த்து குறுகிய கால ஒப்பந்தம், மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்ற ஒப்பந்தம் ஆகியவை மூலம் கூடுதல் தேவை பூர்த்தி செய்யப்படும்.

இந்நிலையில் கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய மாதத்திற்கு கூடுதலாக 2000 மெகாவாட் வாங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கோடை கால மின்தேவையை சமாளிக்க வெளி சந்தைகளில் இருந்து 7,915 மெகாவாட் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
வரும் கோடை காலத்தில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 22,000 மெகாவாட்டுக்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை கால மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 7,915 மெகாவாட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1300 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2610 மெகாவாட், மே மாதத்தில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 650 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 1080 மெகாவாட் கொள்முதல் செய்ய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதுவரை, 2024ம் ஆண்டு மே 2ம்தேதி 20,830 மெகாவாட் மின் தேவை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச தினசரி நுகர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி 454.320 மில்லியன் யூனிட்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச மின் தேவை இந்த எண்கள் தாண்டும் என எதிர்பார்க்கிறது.

The post கோடை கால மின்தேவைக்காக வெளி சந்தையில் இருந்து 7,915 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி: தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Electricity Regulatory Commission ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Electricity Board ,Dinakaran ,
× RELATED என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா...