×

1000 பெண்கள், திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு ஐடிஐ கட்டிடங்கள் ரூ.67.74 கோடியில் புதுப்பிக்கப்படும், அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண்கள், திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக புதிய ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

* திருக்குவளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.50 கோடியில் புதிய மாணவர் விடுதி கட்டிடம் கட்டப்படும்.

* தமிழ்நாட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் பழைய கட்டிடங்களின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.67.64 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை 5 லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைகளோடு கூடுதலாக, செவிலியர் பட்டயப் படிப்பு பயில ரூ.3,000, உணவு தயாரித்தல் மற்றும் சேவை பட்டயப் படிப்பு பயில ரூ.3,000 கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்.

* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி பயில தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை கூடுதலாக ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

* கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முனைவர் பட்டப்படிப்பு பயிலும் நேர்வில் ஒரு கல்வி ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

* தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண், திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக புதிய ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா 1 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல தொழில் இனங்களில் 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊதியத்துடன், 50,000 தொழிலாளர்களுக்கு ரூ.45.21 கோடி வழங்கப்படும்.

The post 1000 பெண்கள், திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக புதிய ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு ஐடிஐ கட்டிடங்கள் ரூ.67.74 கோடியில் புதுப்பிக்கப்படும், அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government ,ITI ,Minister ,C.V. Ganesan ,Chennai ,Workers Welfare Board ,Tamil Nadu Legislative Assembly ,Labor Welfare Department… ,Government ITI ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி