×

57 புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை

*போலீசாருக்கு எஸ்பி உத்தரவு

சித்தூர் : சித்தூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம், எஸ்பி மணிகண்டா தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை எழுதி எஸ்பி மணிகண்டாவிடம் வழங்கினர். இதில் ஏமாற்றுதல் வழக்குகள்- 3, சைபர் கிரைம் – 2, குடும்ப சண்டை- 11, துன்புறுத்தல்- 6, வீட்டு சண்டை- 2, கணவன் துன்புறுத்தல்- 2, நிலத்தகராறு- 18, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு- 7, சாலை தகராறு- 5, சொத்து சண்டை சம்பந்தமாக 1 புகார் என மொத்தம் 57 புகார் மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களுக்கு உறுதி அளித்தார். பின்னர் அவர் பேசியதாவது:

மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் களமாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. ஆகவே சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகள், பொதுமக்கள் வழங்கும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார்கள் மீது மெத்தனம் காட்டக்கூடாது. குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்திலும், சட்டப்படி விசாரணை நடத்தி மனுதாரர்களின் பிரச்னைகளை விரைந்து தீர்வு காண வேண்டும்’ என்றார்.இதில் மாவட்ட இணை எஸ்பி ராஜசேகர், நகர டிஎஸ்பி சாய்நாத் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜூ உத்தரவின்பேரில், பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை மாவட்ட கூடுதல் எஸ்பி ரவி மனோகராச்சாரி பெற்றுக்கொண்டார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து 121 பேர் புகார் மனுக்கள் அளித்தனர்.

பொதுமக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கூடுதல் எஸ்பி உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்களின் பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் ஆய்வு செய்து அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வர முடியாதவர்கள் மாவட்ட காவல் நிலையம், வட்ட அலுவலகங்கள் மற்றும் உட்கோட்ட அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என்று அவர் கூறினார்.

The post 57 புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை appeared first on Dinakaran.

Tags : SP ,Chittoor ,Chittoor SP ,Manikanda ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...