×

வடமதுரை ஜங்ஷன் பிளாட்பாரத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும்

*பயணிகள் கோரிக்கை

வடமதுரை : வடமதுரை ரயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்- திருச்சி ரயில் பாதை மார்க்கத்தில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து 15வது கிலோ மீட்டரில் வடமதுரை ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, வேடசந்தூர் பகுதி மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் காலையில் 6.30 மணிக்கு திண்டுக்கல்- திருச்சி டெமு ரயில் மற்றும் காலை 11.35 மணிக்கு செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்கின்றன.

அதேபோல் மாலை 3.22 மணிக்கு மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் இரவு 7.30 மணிக்கு திருச்சி- திண்டுக்கல் டெமு ரயில் நின்று செல்கிறது. இந்த ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படாமல் செம்மண் தரை மட்டுமே உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: வடமதுரை ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் நான்கு ரயில்களில் மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பயணம் செய்கின்றனர். இந்த ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படாமல் தோண்டி போடப்பட்ட நிலையில் செம்மண் பரப்பப்பட்டுள்ளது.

இதனால் காற்று அடிக்கும் போது புழுதி பறக்கிறது. இதன் காரணமாக ரயில் வரும் வரை பிளாட்பாரத்தில் காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதலாவது பிளாட்பாரத்தில் செம்மண் பரப்பை சரிப்படுத்தி பேவர் பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post வடமதுரை ஜங்ஷன் பிளாட்பாரத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vadamadurai Junction ,Vadamadurai ,Dindigul railway station ,Dindigul-Trichy ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...