சென்னை: இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. வீட்டுவசதி- நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது. தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 15ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நிதி நிலை அறிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது. 21ம் தேதி பொதுவிவாதத்திற்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் அளித்து பேசினர். அதன் பிறகு கடந்த 24ம் தேதி முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கைள் மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடைசியாக கடந்த 4ம் தேதி நீதி நிர்வாகம் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
விவாத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து ேநற்று சனிக்கிழமை, இன்று ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து துறைரீதியான மானியக்கோரிக்கை நடைபெறும்.
இன்று வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் முத்துசாமி புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். தொடர்ந்து நாளை கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கையும், நாளை மறுநாள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடக்கிறது.
28ம்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், 29ம் தேதி காவல், தீயணைப்பு துறை மீதான விவாதம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். தொடர்ந்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
The post 2 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை தாக்கல் appeared first on Dinakaran.
