×

43வது அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படைக்கு முதல் பரிசு: போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு

சென்னை: 43வது அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படையினர் முதல் பரிசு பெற்றனர். அவர்களை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். கடந்த மாதம் 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை அரியானா மாநிலம் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை அடிப்படை பயிற்சி மையத்தில், 43வது அகில இந்திய காவல் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டிகள் நடந்தது.

இந்த போட்டியில் தமிழக காவல்துறை சார்பாக 1 உதவி காவல் கண்காணிப்பாளர், 1 உதவி காவல் ஆணையர், 9 ஆண் குதிரையேற்ற வீரர்கள் மற்றும் 1 பெண் குதிரையேற்ற வீராங்கனை பங்கேற்றனர். போட்டியில் தமிழக காவல்துறை அணியின் உதவி காவல் கண்காணிப்பாளர் ஷுபம் நாகர்கோஜ், ஆபிசர் ஹேக்ஸ் பிரிவில் வெள்ளி பதக்கமும், உதவி ஆணையர் அஜய் தங்கம் ஆபிசர் ஹேக்ஸ் பிரிவில் வெண்கல பதக்கமும், முதல்நிலை பெண் காவலர் சுகன்யா 1 தங்கப்பதக்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் என 2 பதக்கங்களும், முதல்நிலை காவலர் மணிகண்டன் 4வது இடமும், குதிரை பராமரிப்பாளர் ஆகாஷ் குதிரை பராமரிப்பாளர் தேர்வில் வெள்ளி பதக்கமும் பெற்று தமிழக காவல்துறை மற்றும் சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற சென்னை பெருநகர காவல் குதிரைப்படையைச் சேர்ந்த முதல்நிலை பெண் காவலர் சுகன்யா, முதல்நிலை காவலர் மணிகண்டன் மற்றும் குதிரை பராமரிப்பாளர் ஆகாஷ் ஆகியோரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி, போட்டியில் வென்ற குதிரைகளையும் பார்வையிட்டார்.

மேலும், போட்டியில் வென்ற குதிரைகளின் சாகசங்களை கண்டு ரசித்து பாராட்டினார். நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் கபில்குமார் சி சரட்கர், (தலைமையிடம்), கண்ணன், (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), ராதிகா, (மத்திய குற்றப்பிரிவு) காவல் இணை ஆணையர் (கிழக்கு மண்டலம்) விஜயகுமார், துணை ஆணையர்கள் ஜெரினா பேகம், (கீழ்ப்பாக்கம்), கீதாஞ்சலி, (மத்திய குற்றப்பிரிவு-2) சுப்புலட்சுமி (நிர்வாகம்), அன்வர்பாஷா, (ஆயுதப்படை-2) காவல் அதிகாரிகள் மற்றும் குதிரைப்படையினர் கலந்து கொண்டனர்.

The post 43வது அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் சென்னை பெருநகர காவல் குதிரைப்படைக்கு முதல் பரிசு: போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police Cavalry ,43rd All India Equestrian Competition ,Police Commissioner ,Arun ,Chennai ,Haryana… ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...