பாடாலூர், ஏப்.4: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்(40). திமுக பிரமுகரான இவரிடம் டிஎன் 46 – எக்ஸ் 1180 என்ற பதிவெண் கொண்ட கருப்பு நிற மாருதி பளேனோ கார் உள்ளது. இதே பதிவெண் கொண்ட, மற்றொரு காரின் பாஜக பட்டியல் அணியின் மாநில செயலாளர் என பெயர் பலகை பொருத்தப்பட்ட மாருதி பளேனோ கருப்பு நிற கார் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இதைக் கவனித்த இளஞ்செழியன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.
அந்த காரை ஓட்டிச் சென்றவர் பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து (51) என்பதும், அவர் பாஜகவில் பட்டியல் அணி மாநில செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. காரை மடக்கிப் பிடித்ததால் ஆத்திரமடைந்த பிச்சமுத்து தாக்கியதில் இளஞ்செழியனுக்கு கையில் அடிபட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் ஊரக காவல் நிலைய போலீஸார், இளஞ்செழியன் மற்றும் பிச்சமுத்து ஆகிய இருவரது காரையும் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஆவணங்களை பார்வையிட்டு தீவிர விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் இளஞ்செழியனின் கார் பதிவு எண் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவும். பிச்சமுத்துவின் கார் பதிவெண் போலியாக எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பிச்சமுத்து அந்த காரை வேறு ஒருவரிடம் வாங்கியதாக தெரிவித்ததையடுத்து போலீஸார் மேலும், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஆலத்தூர் அருகே உலா வந்த ஒரே பதிவெண் கொண்ட 2 கார்கள் appeared first on Dinakaran.
