ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் வழங்கப்படும்: கலெக்டர் தகவல் திருவாரூர், ஏப். 3; திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ. 1 லட்சம்ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அதன்படி நடப்பு ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்படவுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 15 முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்தாண்டு ஏப்ரல் 1ந் தேதின்று 15 வயது நிரம்பியவராகவும், நடப்பாண்டு மார்ச் 31ந் தேதியன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். கடந்த நிதி ஆண்டில் (2024-25) அதாவது 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்ததற்கான சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பலகலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விபரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.i ல் திவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே வரும் 30ந் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தின் 3 நகள்களை திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக வழங்கிட வேண்டும் என்பதுடன் இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு விளையாட்டு அலுவலகத்தின் தொலைபேசி எண் 04366-290620 மற்றும் கைபெசி எண் 7401703448ல் தொடர்பு கொள்ளலாம்.
The post திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் இளைஞர் விருதுபெற அழைப்பு appeared first on Dinakaran.
