×

மகாராஷ்டிரா துணை முதல்வர் மீது விமர்சனம் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா ஜாமீன் பெற்றார் வரும் 7ம் தேதி ஐகோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு

 

வானூர், ஏப். 2: மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை யூடியூப் சேனலில் விமர்சனம் செய்த வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா நேற்று வானூர் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் நயா பாரத் என்ற ஒரு நகைச்சுவை வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜ கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார்.

இதனால், கொந்தளித்த ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியினர் அந்த நிகழ்ச்சியைப் பதிவுசெய்த ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினார். நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குணால் கம்ரா மீதும், அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவை சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீதும் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுந்தர்மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி, குணால் கம்ரா நேரடியாக விமர்சனம் செய்யவில்லை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆளுங்கட்சி அமைச்சர்களால் மிரட்டப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய மகாராஷ்டிரா போலீசார் முடிவு செய்துள்ளனர், என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் குணால் கம்ரா தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மகாராஷ்டிராவில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது என்று கூறி, இது போன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரர் விழுப்புரம் மாவட்டம் வானூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சொந்த ஜாமீனில் முன்ஜாமீன் பெறலாம். இந்த மனு மீது மும்பை போலீசார் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்நிலையில் குணால் கம்ரா நேற்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் நடுவர் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் மாஜிஸ்ரேட் பிரீத்தி முன்னிலையில் ஆஜரானார். அப்போது விசாரித்த நீதிபதி பிரீத்தி, இரு நபர்கள் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார் அதன்பேரில் புதுச்சேரி மாநிலம் ஆலங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோபி(40), அதே பகுதியைச் சேர்ந்த சரவணன்(35) ஆகிய இருவரும் ஜாமீன் அளித்தனர். மேலும் சொந்த ஜாமீனாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அவரை வரும் 7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

The post மகாராஷ்டிரா துணை முதல்வர் மீது விமர்சனம் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா ஜாமீன் பெற்றார் வரும் 7ம் தேதி ஐகோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Comedian ,Kunal Kamra ,Maharashtra ,Deputy Chief Minister ,Vanur ,Vanur court ,Eknath Shinde ,YouTube ,Deputy ,Chief Minister ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...