×

திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திறக்காத கோயில்களின் கதவுகள் கூட திறந்த வரலாறு முதல்வருக்கு உண்டு: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன்(திமுக) பேசுகையில்” காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம், அருள்மிகு கன்னியம்மன் திருக்கோயில் குளத்தை தூர்வாரி புனரமைக்க அரசு ஆவன செய்யுமா? இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு கன்னியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளமானது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் அந்த குளத்தை தனியார் பங்களிப்போடு அவரும், நானும் சேர்ந்து திருப்பணி செய்வதற்கு எடுத்துக் கொள்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார். சி.வி.எம்.பி.எழிலரசன்: காஞ்சிபுரத்தில் உள்ள சாந்தாலீஸ்வரர் திருக்கோயில் என்பது வியாசர் அவர்களால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட கோயில் என்று சொல்லப்படுகிறது.

அக்கோயிலுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றக்கூடிய ஒரு கோயிலாக இருக்கிற காரணத்தினால் அங்குள்ள சிதிலமடைந்த குளத்தினை சீரமைத்து தருவதன் மூலமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக அமையும். அதேபோல காஞ்சிபுரத்தில் உள்ள காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் என்ற குரு கோயில் ஒன்று இருக்கிறது. எட்டாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. அந்த திருக்கோயிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. எவ்விதமான ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கக்கூடிய அந்த நிலத்தில் ஒரு திருமண மண்டபம் கட்டி தருகிற போது பொதுமக்களுக்கு ஏதுவாக அமையும் என்பதனை தெரிவித்து அரசு கட்டித் தர முன்வருமா.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: அருள்மிகு சாந்தாலீஸ்வரர் திருக்கோயிலில் திருக்குளத்தை ஏற்கனவே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் படித்துறை அமைத்து சீரமைக்கின்ற பணிக்கு ஏற்கனவே மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. போதிய நிதி வசதி இல்லை. இருந்தாலும் அவர் கோரிய இந்த திருக்கோயிலுக்கு தமிழக முதல்வரின் உத்தரவினை பெற்று இந்த ஆண்டு ஆணையர் பொது நல நிதியில் எடுத்துக் கொள்வதற்குண்டான வழி வகைகளை காண்போம். அதேபோல் அவர் கூறிய மற்றொரு திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் இரண்டரை ஏக்கர் இருக்கின்றது. அங்கு திருமண மண்டபம் அமைக்க ரூ.5.50 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அதற்கும் போதிய நிதி வசதி அந்த திருக்கோயிலில் இல்லாததால் பெரிய கோயில்களிலிருந்து கடனாகவோ அல்லது ஆணையர் பொதுநல நிதியை பெற்றோ முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு அந்த திருக்கோயிலுக்கு திருமண மண்டபம் கட்டித் தரப்படும்.

சி.வி.எம்.பி.எழிலரசன்: நெசவாளர்கள் அதிகம் வாழக்கூடிய காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையத்தில் கச்சேபேசுவரர் திருக்கோயில் இருக்கிறது. அந்த கோயில் அருகாமையிலே தான் அறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவும் அமைந்திருக்கிறது. அங்கே குடியிருப்புகளும் இருக்கிறது. அந்த கோயிலுக்கு அதிக அளவில் நிதியும் இருப்பதாக நான் அறிகிறேன். அந்த கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் இருப்பதனால் அந்த இடத்தில் திருமண மண்டபத்தை கட்டி தர முன் வருவாரா என்று அறிய விரும்புகிறேன். அடுத்ததாக, தொன்மையான ஏகாம்பாநாதர் திருக்கோயிலுக்கு திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததின் அடிப்படையில் அமைச்சர் அவர்களே நேரடியாக ஆய்வு செய்து அதற்கான திருப்பணி தொடங்குவதற்கு உத்தரவிட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை விரைவாக முடித்து, குடமுழுக்கு விழா காண வேண்டும் என்று பொதுமக்களோடு நானும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன், குடமுழுக்கு விழா எப்பொழுது நடத்தி தரப்படும்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு : அருள்மிகு கச்சேபேசுவரர் திருக்கோயிலுக்கு ஏற்கனவே ரூ.5.50 கோடி செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு போதிய நிதி வசதி இல்லை என்பதனால் முதல்வரின் உத்தரவை பெற்று, இதற்கும் கூடுதலாக வருமானம் இருக்கின்ற திருக்கோயிலிலிருந்து நிதியை கடனாக பெற்று இந்த பணியும் மேற்கொள்ளப்படும். அதோடு மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் நகரமே திருக்கோயிலின் நகரமாகும். அந்த மாவட்டத்தில் மட்டும் 168 திருக்கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக இருக்கின்றது. இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2022 ஆம் ஆண்டு உறுப்பினர் அவர்கள் அந்த திருக்கோயிலுக்கு ஆய்விற்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபமானது 17 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் மூடி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திறக்காத திருக்கோயில்களின் கதவுகள் கூட திறந்தது என்ற வரலாறு திராவிட மாடல் ஆட்சி நாயகன் முதல்வருக்கு உண்டு. அந்த வகையில் அந்த திருக்கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தை 17 ஆண்டுகளுக்குப் பிறகு திறந்து வைத்த பெருமையும் முதல்வருக்கு உண்டு.

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சென்னையில் சீதா கிங்ஸ்டன் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்டு வந்த பள்ளி 2022 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் அந்தப் பள்ளியை திருக்கோயில் சார்பில் ஏற்று நடத்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, இன்றைய தினம் 11 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 32 கூடுதல் வகுப்பறைகளோடு 1,550 மாணவ, மாணவியர் கல்வி பயின்று கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பள்ளி மாணவர்களும் கல்வி கற்கின்ற வகையில் ஒரு கடவுளாக இருப்பவர் நம்முடைய முதல்வர் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் 33 கோடி ரூபாய் செலவில் 23 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 8 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதம் 15 பணிகள் நிறைவுற்றபின் வரும் செப்டம்பர் மாதம் அத்திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திறக்காத கோயில்களின் கதவுகள் கூட திறந்த வரலாறு முதல்வருக்கு உண்டு: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,DMK ,Minister ,P.K. Sekarbabu ,Chennai ,Kanchipuram ,CVMP ,Ezhilarasan ,Arulmigu Kanniamman temple ,Pillaiyar Palayam ,Arulmigu Kanniamman ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...