×

பழநியில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5ல் துவக்கம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கொண்டாடப்படும் முதன்மை திருவிழா பங்குனி உத்திரம். இவ்விழாவிற்கு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இவ்விழா வரும் 5ம் தேதி திருஆவினன்குடி கோயிலில் காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. விழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி யானை, தங்கக்குதிரை, வெள்ளிப்பிடாரி மயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 10ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப்.11ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக 14ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது.

விழா நடைபெறும் 10 நாட்களும் குடமுழுக்கு நினைவரங்கில் பக்திச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாதஸ்வர இன்னிசை, பரதநாட்டியம், வீணை இன்னிசை, பொம்மலாட்டம், தேவர் ஆட்டம், விகடம், சாக்ஸபோன், நாட்டுப்புற பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தங்கரத புறப்பாடு ரத்து
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஏப்.9ம் தேதி முதல் 13ம் தேதி வரை 5 நாட்கள் பழநி முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 9ம் தேதி கோயில் நிர்வாகத்தின் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெறும்.

The post பழநியில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5ல் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Panguni Uthra Festival ,Palaniil ,Palani ,Panguni Uthram ,Palani Dandayudapani Swami Malaikoil ,Dindigul district ,Erode district ,Khodomvi ,Murugan ,Panguni Uttra Festival ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?