×

இனி ஒருபோதும் பாஜ உறவை முறிக்க மாட்டேன்: அமித் ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் உறுதி

பாட்னா: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக பீகார் சென்றுள்ளார். பாட்னாவில் பல்வேறு திட்டங்களை அமித் ஷா தொடங்கி வைத்தார். நேற்று ஒரு நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் நிதிஷ்பேசும்போது,‘‘ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது முஸ்லிம்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றனர். ஆனால் இரு பிரிவினர் இடையே நடந்த மோதல்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுகாதார வசதிகள் எதுவும் அப்போது கிடையாது. கல்வி வசதிகளும் இல்லை. ஜேடியு ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் பீகாரின் நிலைமை மாறியது.

பாஜவுடன் 2 முறை கூட்டணியை முறித்தேன். என்னுடன் இருந்தவர்களால்தான் இந்த பிரச்னை ஏற்பட்டது. இரண்டு முறை தவறு செய்து விட்டேன். இனி ஒரு போதும் பாஜ கூட்டணியை முறிக்க மாட்டேன்’’ என்றார். பாஜவுடன் கூட்டணியில் இருந்து வரும் நிதிஷ் குமார் 2014 மற்றும் 2022 ம் ஆண்டுகளில் கூட்டணியை விட்டு விலகி ஆர்ஜேடி உடன் கூட்டணி அமைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

லாலு மீது தாக்கு
ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், லாலு பிரசாத் மற்றும் ரப்ரி தேவி ஆட்சியில் பீகாரில் காட்டாட்சி நடந்தது. கோஷ்டி சண்டை, ஆள் கடத்தல் போன்ற குற்றங்கள் நடந்தன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்யவில்லை. லாலுவின் ஆட்சியில் ஏராளமான சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டன என குற்றம் சாட்டினார்.

The post இனி ஒருபோதும் பாஜ உறவை முறிக்க மாட்டேன்: அமித் ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் உறுதி appeared first on Dinakaran.

Tags : BJP ,Nitish Kumar ,Amit Shah ,Patna ,Union Minister ,Bihar ,Chief Minister ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...