×

ஏப்.2 முதல் 6ம் தேதி வரை மதுரையில் மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வரும் ஏப்.2 முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் 3ம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றுகின்றனர்.மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், ஏப்.1ம் தேதி மாலை தியாகிகள் நினைவு சுடர், மாநாட்டு கொடிபயணம் நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாநாட்டு கண்காட்சியை பத்திரிகையாளர் என்.ராம் தொடங்கி வைக்கிறார். புத்தக கண்காட்சியை பத்திரிகையாளர் வே.பரமேசுவரன் தொடங்கி வைக்கிறார்.

ஏப்.2ம் தேதி காலை கொடியேற்றுதல், செந்தொண்டர் அணிவகுப்பு, மாநாட்டு தொடக்க நிகழ்ச்சி, பொது மாநாடு ஆகியவை நடைபெறுகிறது. அன்று மாலை நடைபெறும் கருத்தரங்கில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைக்கலைஞர்கள் ராஜுமுருகன், சசிகுமார் ஆகியோர் பேசுகின்றனர். 3ம் தேதி மாலை 5 மணியளவில் `மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்’ நடைபெற உள்ளது. வரவேற்பு குழு தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகியோரும் பேசுகின்றனர்.

4ம் தேதி மாலை நடைபெறும் கருத்தரங்கில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் பேசுகின்றனர். 5ம் தேதி மாலையில் நடிகை ரோகிணி வழங்கும் `ஒராள்’ நாடகம் நடைபெறுகிறது. தொடர்ந்து திரைக்கலைஞர்கள் நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் மாரி செல்வராஜ், த.செ.ஞானவேல் ஆகியோர் பேசுகின்றனர்.மாநாட்டின் நிறைவு நாளான 6ம் தேதி மாலை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது. பேரணி முடிவில் மஸ்தான்பட்டி – விரகனூர் ரிங்ரோட்டில் டோல்கேட் அருகே பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகிக்கிறார். கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத், உ.வாசுகி ஆகியோர் பேசுகின்றனர். மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

The post ஏப்.2 முதல் 6ம் தேதி வரை மதுரையில் மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Marxist All India Conference in ,Madura ,MLA ,K. Stalin ,Madurai ,All India Conference ,Marxist Communist Party ,Chief Minister of ,Tamil ,Nadu ,MLA K. Stalin ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Madurai Thamukkam Maidan ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்கள் மற்றும்...