×

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று தமிழகம் வந்தது

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழகம் வந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு, தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி.யும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். தெலுங்கு-கங்கா ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம்.  இந்நிலையில் ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு திறக்கவில்லை.

அதனால், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடிதம் எழுதினர். இதையடுத்து தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 24ம் தேதி காலை 11.45 மணிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீட்டர் தூரம் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு இன்று காலை 7 மணிக்கு வந்தடைந்தது. தமிழக-ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். இந்த தண்ணீர் இன்று இரவு அல்லது நாளை காலை பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று தமிழகம் வந்தது appeared first on Dinakaran.

Tags : Kandaleru dam ,Tamil Nadu ,Uthukottai ,Kandaleru ,dam ,Andhra Pradesh ,Andhra Pradesh government ,Chennai ,Krishna ,Dinakaran ,
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...