×

சோழவந்தான் அருகே கிணற்றில் தவறி விழுந்த முயல் உயிருடன் மீட்பு: தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை

 

சோழவந்தான், மார்ச் 28: சோழவந்தான் அருகே கிணற்றில் தவறி விழுந்த முயலை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். சோழவந்தானை அடுத்த விக்கிரமங்கலம் ஊராட்சி வையத்தான் கிராமத்தில் உள்ள கிணற்றில், நேற்று மதியம் ஒரு முயல் விழுந்து கிடப்பதாக சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நிலைய அலுவலர் தௌலத் பாதுஷா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஆழமான கிணற்றில் உள்ள நீரில் முயல் தத்தளித்துக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி தத்தளித்துக் கொண்டிருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள ஆண் முயலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கிணற்றில் விழுந்தது சிறிய முயல் தானே என நினைக்காமல், அது குறித்து தகவல் கொடுத்த கிராமத்து மக்களையும், அதை உயிருடன் மீட்ட தீயணைப்புதுறையினரையும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

The post சோழவந்தான் அருகே கிணற்றில் தவறி விழுந்த முயல் உயிருடன் மீட்பு: தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Cholavanthan ,Vaiyathan ,Vikramangalam panchayat ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...