×

ராகுல் காந்தி பேச வாய்ப்பு மறுக்கப்படும் விவகாரம் சபாநாயகருக்கு 8 கேள்விகள்: நேரில் சந்தித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடிதம்

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை பேச விடாமல் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படும் விவகாரம் உள்ளிட்ட 8 முக்கிய பிரச்னைகள் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் குழு கடிதம் கொடுத்துள்ளது. மக்களவையில் நேற்று முன்தினம் விதி 349ன் கீழ் அவையின் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு கண்ணியத்தை காப்பாற்றும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டுமென சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

ஆனால் எந்த சம்பவத்திற்காக அவர் அப்படி கூறினார் என்பதை தெரியப்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்காக எழுந்த போது, சம்மந்தமின்றி அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இது குறித்து கவலை தெரிவித்த ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவரான தனக்கு அவையில் பேசுவதற்கான அரசியலமைப்பு உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மக்களவையின் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் குழு சபாநாயகர் ஓம்பிர்லாவை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்தனர். இக்குழுவில் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோர் சபாநாயகரை சந்தித்தனர். பின்னர் கவுரவ் கோகாய் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆர்எஸ்பி, சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் கையெழுத்திட்ட கடிதத்தை நாங்கள் சபாநாயகரிடம் கொடுத்துள்ளோம்.

ஆளும் தரப்பினர் எவ்வாறு சபையின் மரபுகள், விதிகள் மற்றும் கலாச்சாரத்தை மீறுகின்றனர் என்பது குறித்து சபாநாயகரிடம் எங்கள் கவலை மற்றும் ஏமாற்றத்தை தெரிவித்துள்ளோம். குறிப்பாக, புதன்கிழமையன்று விதி 349 பற்றி சபாநாயகர் குறிப்பிட்டு, எதிர்க்கட்சி தலைவரும், உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டுமென கூறினார். மேலும், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பேச எழுந்து நின்றதும், சபை ஒத்திவைக்கப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்படாததை இந்த தேசம் பார்த்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் என்பது அரசியலமைப்பு பதவி.

எனவே சபாநாயகர் குறிப்பிட்ட சம்பவம் எது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் சபாநாயகரின் கருத்துக்கள் அரசியலாக்கப்பட்டு வெளியில் வேறு விதமாக பரப்பப்படுகிறது. அவரது கருத்தை பாஜ ஐடி பிரிவு எப்படி அரசியலாக்குகிறது என்பதையும் விளக்கினோம். அவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச எழுந்து நிற்கும் போது அவர் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவது நாடாளுமன்ற நடைமுறைகளை உடைத்து, மக்களவையில் ஆரோக்கியமான விவாதத்திற்கான வாய்ப்பை நிராகரிப்பதற்கு சமம்.

நாடாளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி, அனைத்து உறுப்பினர்களும் விவாதம் செய்யவும், தங்கள் அரசியலமைப்புப் பணிகளைச் செய்யவும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதில் குழப்பமான போக்குகள், நாடாளுமன்றத்தின் புனிதத்தைக் சீர்குலைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் கடிதத்தில், மக்களவை துணை சபாநாயகர் பதவி 2019ல் இருந்து காலியாக இருப்பது, அவையின் அலுவல் குழுவின் முடிவுகள், அரசு தரப்பில்ஒருதலைப்பட்சமாகவும் மற்ற கட்சிகளிடம் தகவல் தெரிவிக்காமலும் எடுக்கப்படுவது, ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஒவ்வொரு முறையும் புறக்கணிக்கப்படுவது உள்ளிட்ட 8 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

முன்னதாக பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மக்களவை நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் காந்தி தனது சகோதரியும் எம்பியுமான பிரியங்கா காந்தியின் கன்னத்தை பாசத்துடன் தட்டியதால் சபாநாயகரின் எச்சரிக்கைகள் எழுந்தன’’ என கூறியது குறிப்பிடத்தக்கது.

* அவர்கள் பயப்படுவது ஏன் என தெரியவில்லை
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘அவையில் என்னை பேச அவர்கள் அனுமதித்ததே கிடையாது. அவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என எனக்கு தெரியவில்லை’’ என்றார்.

* அமைச்சர் தோள் மீது கைபோட்ட எம்பி கடுப்பான சபாநாயகர்
மக்களவை நேற்று நடந்து கொண்டிருந்த போது, பீகார் மாநிலம் புர்னியா தொகுதியின் சுயேச்சை எம்பி பப்பு யாதவ் தனது தொகுதியில் விமானம் நிலையம் தொடர்பாக அருகில் அமர்ந்திருந்த ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சரின் தோள் மீது பப்பு யாதவ் கைபோட்டு நட்பாக பேசிக் கொண்டிருப்பதை கவனித்த சபாநாயகர் ஓம்பிர்லா, விதி 362ன்படி நடத்தை விதிகளை பின்பற்றி கண்ணியம் காக்க வேண்டுமென பப்பு யாதவ்வை எச்சரித்தார்.

The post ராகுல் காந்தி பேச வாய்ப்பு மறுக்கப்படும் விவகாரம் சபாநாயகருக்கு 8 கேள்விகள்: நேரில் சந்தித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,India Coalition ,NEW DELHI ,INDIA COALITION MPS COMMITTEE ,BIRLA ,LLAKAWA ,India Alliance ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...