×

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளத்தில் இந்தி திணிப்பு! : வைகோ கண்டனம்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளத்தில் இந்தி திணிப்பிற்கு மதிமுக எம்.பி. வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், ” சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் மண்டல வானிலை ஆய்வு மையம், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைமை அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மாநிலங்களுக்கும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் மண்டல அலுவலகமாக செயல்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மாநில ஆய்வு மையங்கள் வானிலை முன்னறிவிப்புகளை அந்தந்த மாநிலத்தின் மொழியில் வழங்கும் படி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதே போல், தமிழ்நாட்டிற்கான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழில் வழங்கி வந்தது.

முன்பு இருந்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் வலைத்தளம், முழுவதும் தமிழில் இருக்கும். அதே வேளையில் மற்ற மொழியினர் முன்னறிவிப்புகளை அறிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கும். தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய வலைத்தளம் முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கிறது. ஆனால் தமிழில் குறிப்பிட்ட முன்னறிவிப்பு சேவைகள் மட்டுமே உள்ளன. முழுவதுமாக தமிழில் இருந்த வலைத்தளத்தில் தற்போது தமிழ் உள்ள அளவிற்கு இந்தி மொழியும் இடம்பெற்றுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வானிலை முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது அதில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது ஒன்றிய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒன்றிய பாஜக அரசின் மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க முயற்சிக்கும் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக தமிழ்நாடு எதிர்த்து வரும் நிலையில் இந்திய அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் மூர்க்கத்தனமாக இந்தியை திணிப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். சென்னை வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் உள்ள இந்தி மொழியை அறவே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளத்தில் இந்தி திணிப்பு! : வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Center ,Vaiko ,Chennai ,MDMK ,Regional Meteorological Center ,Nungambakkam, Chennai ,Indian Meteorological Center… ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...