×

ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடியில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்: 20 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்து பேசினார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார், அதன் விவரம் பின்வருமாறு:

*பழுதடைந்த நிலையில் உள்ள 500 ஊராட்சி அலுவலக கட்டிடங்கள் ரூ.157 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.

*ஊரகப் பகுதிகளில் உள்ள 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.87 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

*500 முழுநேர நியாய விலைக்கடைகள் ரூ.61 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

*1 கோடி மரக்கன்றுகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அரசு நிலங்கள், நிறுவனங்கள் மற்றும் சாலையோரங்களில் நடப்படும்.

*ஊரகப் பகுதிகளில் 500 ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலை மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு, சுற்றுசுவர் ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

*ஊரகப்பகுதிகளில் புதிய குளங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சமுதாய நிலங்களை சமன்படுத்தி மேம்படுத்துதல் போன்ற பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

*குக்கிராமங்களை இணைக்கும் விதமாக ஊரகப்பகுதிகளில் உள்ள மண் சாலைகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

*ஊரகப் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் சந்துகளில், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் பேவர்பிளாக் சாலைகள் அமைத்தல் பணிகள் ரூ.350 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

*2025-26ம் ஆண்டில், ஊரகப் பகுதிகளில் புதிதாக குழந்தை நேய வகுப்பறைகள் ரூ.182 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

*2025-26ம் ஆண்டிலும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் ரூ.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

*கிராம சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.

*ஊரக வீடுகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் தடையற்ற குடிநீர் விநியோகிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1,200 புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும்.

*தமிழ்நாட்டில் நகர்புறத்தை ஒட்டியுள்ள 690 ஊராட்சிகளுக்கு குடிநீர், சுகாதாரம், சாலை பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ.10 லட்சம் வீதம் ரூ.69 கோடி மானியமாக வழங்கப்படும்.

*தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் உள்ள 278 மலைக்கிராம ஊராட்சிகளுக்கு, குடிநீர், சுகாதாரம், சாலை பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ.30 கோடி மானியமாக வழங்கப்படும்.

*வன உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ.10 கோடி மானியமாக வழங்கப்படும்.

*துப்புரவு தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்படும்.

*ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பழைய, பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக 10 ஊராட்சி ஒன்றிய அலுவலக் கட்டிடங்கள் தலா ரூ.5.90 கோடி வீதம் மொத்தம் ரூ.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

*நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2025-26ம் ஆண்டிற்கு 50 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ரூ.150 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

*ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள பள்ளிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக் கட்டடங்களை புனரமைத்து, முறையாக பராமரிப்பதற்காக, விரிவான பராமரிப்புக் கொள்கை வகுக்கப்படும். 2025-26ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இதற்கென ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட 1500 சமுதாய சுகாதார வளாகங்கள் ரூ.31.50 மதிப்பீட்டில் கட்டப்படும் உள்ளிட்ட 20 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

The post ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடியில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்: 20 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் ஐ.பெரியசாமி appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Panchayat Union ,Minister I. Periyasamy ,Chennai ,Minister ,I. Periyasamy ,Tamil Nadu Legislative Assembly ,Rural Development and Panchayats Department… ,Union ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?