×

மாநிலங்களவை தலைவர் கூட்டிய கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை: நீதிபதி விவகாரத்தில் மீண்டும் ஆலோசனை

புதுடெல்லி: மாநிலங்களவை தலைவர் கூட்டிய கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு கணக்கில் வராமல் கட்டுக்கட்டாக பணக்குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட 10 நாட்களுக்கு பின்பு அதுகுறித்து நேற்று துணை ஜனாதிபதியும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில், இந்த பிரச்னையில் அடுத்தகட்டமாக என்ன நடைமுறைகளை பின்பற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் மற்றொரு கூட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சிவசேனா (உத்தவ்) எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில்:
உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் இருந்து பணம் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, நீதித்துறை மீதான நடவடிக்கை குறித்த கேள்வி எழுந்துள்ளது. மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் கூட்டிய கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் பிரச்னை மீண்டும் அடுத்த வாரம் விவாதிக்க வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னை குறித்து மாநிலங்களவை தலைவர், அவையின் கட்சித் தலைவர்களுடன் நேரில் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வருவார். அடுத்த வாரம் இப்பிரச்னை குறித்த விவாதம் அவையில் நடக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

முன்னதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், அவைத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டம் குறித்து மாநிலங்களவையில் விவாதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவின் பேரில், மூன்று நீதிபதிகள் குழு உள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

The post மாநிலங்களவை தலைவர் கூட்டிய கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை: நீதிபதி விவகாரத்தில் மீண்டும் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,New Delhi ,Justice ,Yashwant Verma ,Delhi High Court ,Dinakaran ,
× RELATED டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி