×

சென்னையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9.31 கோடியில் 70 பணிகளை மேற்கொள்ள அனுமதி; மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற பகுதி வளர்ச்சிக்காக ‘நமக்கு நாமே திட்டம்’ அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்திற்கு குறிப்பிட்ட அளவு நிதி பங்களிப்பை அளிக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிக் கூடங்களை மேம்படுத்துதல், பொது சுகாதார மையம், கற்றல் மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் நமக்கு நாமே திட்டத்தில், ரூ.300 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்,  என்று அறிவித்தார். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்கா, விளையாட்டுத் திடல், போக்குவரத்து தீவுத்திட்டுக்கள், செயற்கை நீரூற்றுகள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல், மேம்படுத்துதல், மக்கள் கூடும் பகுதிகளில் உயர்கோபுர சூரிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மரக்கன்றுகளை நடுதல், பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடங்கள், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை, சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நவீன நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் அமைத்தல், புதிய பாலங்கள், குறுக்கு பாலம், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல், அங்கன்வாடி மையங்கள், பொதுக்கழிப்பறைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளை புனரமைத்தல், தகனமேடைகளை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம் என ஏற்கனவே மாநகராட்சியின் சார்பில் பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள்,  தன்னார்வலர்கள் மற்றும் இதர பிற தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட  திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அதில் 70  திட்டப்பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் நிர்வாக அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9.31 கோடி மதிப்பில்  70 திட்ட பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த 70 திட்டப் பணிகளுக்கான மதிப்பீடான ரூ.9.31 கோடி மதிப்பீட்டில் ரூ.7.70 கோடி பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பங்களிப்பாகவும் ரூ.1.61 கோடி அரசின் பங்களிப்பாகவும் வழங்கப்படவுள்ளது. மேலும் 70 திட்டப் பணிகளில் 50 சதவீதத்திற்கு மேல் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு உள்ள திட்ட பணிகளுக்கு நேரடியாக பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படும், என சென்னை மாநகராட்சி  ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்….

The post சென்னையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.9.31 கோடியில் 70 பணிகளை மேற்கொள்ள அனுமதி; மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...