*சுகாதார சீர்கேட்டை தடுக்க கோரிக்கை
கேடிசி நகர் : பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனை முன்பாக பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதாக குற்றம்சாட்டும் மக்கள், இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுத்துநிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலத்தில் இடம்பெற்ற அனைத்து வார்டுகளிலும் விடுபட்ட இடங்களில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இவற்றில் பணிகள் முடிந்த ஒருசில இடங்களில் அவ்வப்போது ஏற்படும் அடைப்பால் பாதாள சாக்கடை கழிவுநீரானது வெளியேறி வீதிகளில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவது தொடர்கதையாகி விட்டது.
அந்தவகையில் பாளை குளோரிந்தா சர்ச் அருகே பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் வெளியேறிய கழிவுநீரும் ஆறாக ஓடியது. இதுகுறித்து தினகரனில் படத்துடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பாதாள சாக்கடை அடைப்பு அகற்றப்பட்டு கழிவுநீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அதன் சுவடு மறைவதற்குள் பாளை ஐகிரவுண்ட் பகுதியில் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக திகழும் அரசு மருத்துவமனை முன்பாக பாதாள சாக்கடையில் எதிர்பாராதவிதமாக திடீரென அடைப்பு ஏற்பட்டது. இது உடனடியாக சரிசெய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மேன்ஹோல் வழியாக வெளியேறும் கழிவுநீரானது அரசு மருத்துவமனை முன்பாக சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடை உள்ளிட்டவைகளுக்கு வருகைதருவோரும் பாதாள சாக்கடை கழிவுநீர் துர்நாற்றத்தால் முகம் சுழிக்கும் அவலம் தொடர்கிறது. மேலும் அருகிலேயே பஸ்நிறுத்தம் இருப்பதால் பஸ்சில் ஏறி, இறங்கும் பயணிகளும் பாதாள சாக்கடை கழிவுநீரை மிதித்தவாறே கடந்து செல்லவேண்டி உள்ளது.
அத்துடன் இவ்வாறு ஆறாக ஓடும் இந்த பாதாள சாக்கடை திட்ட கழிவுநீரானது அப்பகுதியில் உள்ள கலெக்டர் பங்களா வரை செல்கிறது.எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்துவதோடு பாதாள சாக்கடை அடைப்பை போர்க்கால அடிப்படையில் சரிசெய்வதோடு அப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை நிரந்தரமாக தடுக்க ஏதுவாக கழிவுநீர் செல்லாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பாளை ஐகிரவுண்ட் பகுதியில் ஜிஹெச் முன் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர் appeared first on Dinakaran.
