×

மாணவர்கள் பாதுகாப்பை கருதி சிறுவம்பார் தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மங்கலம்பேட்டை : கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகேயுள்ள, சிறுவம்பார் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இப்பள்ளி வளாகத்திற்குள் நூறாண்டு காலம் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது.

இம்மரத்தின் நிழலில் மாணவர்கள் விளையாடியும், இளைப்பாறியும் வந்தனர். இந்த நிலையில் இந்த ஆலமரத்தை ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சில மர்ம நபர்கள் யாரோ வெட்டி விழ்த்தியுள்ளனர். மேலும் இம்மரத்தை வெட்டுவதற்காக பள்ளியின் சுற்றுச்சுவரையும் இடித்து சேதப்படுத்தினர்.

சுற்றுச்சுவரை சேதப்படுத்தியதால் வெளிப்பகுதியில் இருந்து பள்ளிக்குள் கால்நடைகள் செல்வதற்கும், பள்ளி நேரங்களில் சமூக விரோதிகள் நடமாடுவதற்கும், தவறான செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பாக உள்ளது.

ஓராண்டு காலம் ஆகியும் இந்த மரம் அப்புறப்படுத்தாமலும், சுற்றுச்சுவர் சரி செய்யப்படாமலும் உள்ளதால் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது. மேலும் பள்ளியில் பயிலும் சில மாணவர்களும் வகுப்பு நேரங்களில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் வெளியில் செல்கின்ற சூழலும் உள்ளது.

இதேபோல் பள்ளியின் முன்பாக தெருவில் ஓடும் கழிவுநீரும் சுற்றுச்சுவரை ஒட்டி ஓடுவதால் மாணவர்களுக்கு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை உடனே கட்ட வேண்டும் என்றும், அனுமதியின்றி வெட்டப்பட்ட ஆலமரத்தை அகற்ற வேண்டும் என்றும் இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இவ்வூரின் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் வழக்கறிஞர் ஆனந்தகண்ணன் கூறுகையில், ”இங்கு நிழல் தரும் ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது இதுவரை ஓராண்டு காலமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் வெட்டி வீழ்த்தப்பட்ட அந்த மரமும் அகற்றப்படவில்லை. அதேபோல் சுற்றுச்சுவரும் சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளேன். ஒன்றியக்குழு கூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

The post மாணவர்கள் பாதுகாப்பை கருதி சிறுவம்பார் தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Siruvambar Primary School ,Mangalampet ,Panchayat Union Primary School ,Siruvambar ,Cuddalore ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...