×

ஜாமீன் பெற்ற விசாரணை கைதிகள் சிறையில் தொடர்ந்து இருக்க அனுமதிக்க கூடாது: தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குற்ற வழக்குகளில் ஜாமீன் பெற்றவர்கள் சிறையில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் வெளியேறியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள வசதியில்லாத, ஏழை கைதிகளுக்கு ஜாமீன் பெறுவதற்கான உரிய பொருளாதார வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட பணிகள் ஆணை குழு சார்பில் வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆஜராகி, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஜாமீன் பெற்றவர்கள் சிறையிலிருந்து வெளியேறுவதை சட்ட பணிகள் ஆணைக் குழுவும் சிறை நிர்வாகமும் தினமும் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜாமீன் பெற்றுள்ள கைதிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட சிறை அதிகாரிகள் சட்ட பணிகள் ஆணையத்தின் வழக்கறிஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஜாமீன் பெற்றவர்கள் தேவையில்லாமல் சிறைகளில் இருக்க கூடாது. ஒருவர் ஜாமீன் பெற்றுவிட்டால் அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

இது அவர்களுக்கு அரசியலமைப்பில் தரப்பட்ட உரிமை. தாமதப்பட்டால் அது மனித உரிமை மீறலாகும். எனவே, சிறை அதிகாரிகளும், சட்ட பணிகள் ஆணைய அதிகாரிகளும் உரிய விதிகளை கடைபிடித்து ஜாமீன் பெற்ற கைதிகளை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

The post ஜாமீன் பெற்ற விசாரணை கைதிகள் சிறையில் தொடர்ந்து இருக்க அனுமதிக்க கூடாது: தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : HC ,Tamil Nadu Legal Services Commission ,Chennai ,Chennai High Court ,
× RELATED நடிகர் சிவாஜி இல்ல வழக்கு.. நடிகர்...