×

ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் சின்னநாளி பாசனமடை கால்வாய் தூர்வாரும் பணி

*2 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளே களமிறங்கினர்

ஏரல் : ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் சுமார் 680 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் அமைந்துள்ள சின்னநாளி பாசனமடை வாய்க்காலை தூர்வாரும் பணிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளே நேற்று நேரடியாக களமிறங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் சுமார் 680 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளம் அமைந்துள்ளது. இக்குளத்திற்கு மருதூர் அணையில் இருந்து சிவகளை குளம் வழியாக தண்ணீர் வந்து பெருகும். மேலும் மழைக்காலத்தில் காட்டாற்று தண்ணீரும் குளத்தை வநதடையும். இக்குளம் நிறைந்திருக்கும் போது கடல் போல் காட்சியளிக்கும். இந்த குளத்தில் உள்ள 7 பாசனமடை மூலம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை விவசாயம் நடந்து வருகிறது.

இந்த குளத்தின் பல இடங்களில் உள்ள பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாராத நிலையில் விவசாயிகள் விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமலும், வயலுக்குள் தேங்கிய தண்ணீரை வடிய வைத்திட முடியாததாலும் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் அப்படியே போட்டு விட்டனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக விவசாய நிலங்கள் எல்லாம் காட்டு செடி, கொடிகள் முளைத்து தரிசு நிலங்களாகவும், புல் ஆக்கிரமிப்பு செய்த நிலையிலும் உள்ளது.

இதேபோல் பெருங்குளம் சின்ன நாளி மடையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் பாசன மடையும் தூர்ந்து போய் கிடந்ததால் இப்பகுதியில் முற்றிலும் விவசாயம் செய்ய முடியாமல் போனது. இதனால் வயல்களில் தண்ணீரை வடிய வைத்திட முடியாமல் எப்பொழுதும் வயல் பகுதி இருந்த இடம் தெரியாமல் குளம் போல் தண்ணீர் அப்பகுதியில் தேங்கிய நிலையில் உள்ளது.

இதையடுத்து விவாசயிகள் இந்த பாசன மடையை தூர்வாரிட வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து விவசாயிகளே இந்த பாசன மடையை தூர் வாரி வரும் காலத்திலாவது விவசாயத்தை தொடர்ந்திட முடிவு செய்தனர்.

ஜேசிபி மூலம் சின்னநாளி பாசன மடை வாய்க்காலை தூர்வாரும் பணியில் நேற்று நேரடியாக களமிறங்கினர். நிகழ்வில் பெருங்குளம் குளத்து நீரினைப் பயன்படுத்துவோர் பாசன சங்கத்தின் தலைவர் சுடலை, உறுப்பினர் ரவி மற்றும் விவசாயிகள் பேச்சிமுத்து, முத்துமாலை, ராஜேந்திரன், வண்ணிராஜ், சுரேஷ், வத்ராப்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாய்க்காலை தூர்வாரும் பணிகள் குறித்து விவசாய சங்கத்தலைவர் சுடலை கூறுகையில் ‘‘பெருங்குளம் குளத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது.

இங்குள்ள பாசனமடை மற்றும் வடிகால் மடை வாய்க்கால்கள் பராமரிப்பின்றி தூர்ந்து போனதால் குளத்தில் தண்ணீர் இருந்தும் விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமலும், வயல்களில் தேங்கும் அதிக அளவு தண்ணீரை வடிய வைத்திட முடியாத நிலையும் இருந்து வருவதால் கடந்த 2 ஆண்டுகளாக பெருங்குளம் பாசன பகுதியில் பாதி வயல்களுக்கு மேல் விவசாயம் நடைபெறாமல் உள்ளது.

பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் வாய்க்கால்களை தூர்வார எந்த நடவடிக்கையும் இல்லாததால் விவசாயிகள் உதவியுடன் பாசன வாய்க்காலை நாங்களே தூர்வாரி வருகிறோம். இதனால் 2 ஆண்டுகள் கழித்து இப்பகுதியில் மீண்டும் விவசாயம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

The post ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் சின்னநாளி பாசனமடை கால்வாய் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Chinnaali Irrigation Canal ,Perungulam village ,Eral ,Chinnaali Irrigation ,Canal ,Eral.… ,Perungulam ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...