×

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

டெல்லி:இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

மார்ச் மாதம் வந்தாலே வெப்பத்தின் தாக்கம் சீண்டி பார்க்க ஆரம்பித்துவிடும். அதற்கு நடப்பாண்டு மட்டும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் பருவநிலை மாற்றம் என விஷயம் முன்வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மிக வெப்பமான ஆண்டு என்று சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பு அறிவித்தது நினைவிருக்கலாம்.

பருவநிலை மாற்றத்தின் நீட்சியால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. மிகத் தீவிரமான புயல்கள் உருவாகின்றன. பலத்த மழை கொட்டி தீர்க்கிறது. வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, தாங்க முடியாத வறட்சி, காட்டுத் தீ ஏற்படுகிறது.

நாடு முழுவதும் அடுத்த 4 நாட்கள் இயல்பு வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இந்த மாற்றத்தை படிப்படியாக உணரலாம். மத்திய இந்தியாவில் அதிகபட்சமாக 4 டிகிரி வரையிலும், வடமேற்கு இந்தியாவில் 5 டிகிரி வரையிலும் வெப்பம் அதிகரிக்கும். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் என்று தெரிகிறது.

அடுத்த மூன்று நாட்களுக்கு படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலையானது, அதன்பிறகு படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் ஈரப்பதம் குறையும். எனவே மக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : India ,DELHI ,Indian Meteorological Survey ,northwest India ,Dinakaran ,
× RELATED அதிபர் டிரம்பின் பரஸ்பர வரியை...