×

தேசிய கல்வி கொள்கை திட்டம் தாய்வழி கல்வியைத்தான் ஊக்குவிக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை: சென்னையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பேட்டி: தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை. தாய்வழி கல்வியைத்தான் அது ஊக்குவிக்கிறது. இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையை ஏற்கவில்லை. பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழகம் மட்டும்தான் ஏற்றுக்கொள்ள வில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

இப்போது தொகுதி மறுவரையறை பிரச்னையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே மோடி, தெளிவாக தெரிவித்து விட்டார். யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்றார். ஆனால் இவர்கள் வேண்டுமென்றே, பிரச்னையை கிளப்புகிறார்கள். மக்கள் தொகை மட்டும் அடிப்படை இல்லை என்பதனை தெளிவாக சொல்கிறேன். அப்படி செய்தால் லடாக் போன்று சிறு, சிறு பகுதிகளுக்கு எம்.பி.க்கள் இருக்காது.

தொகுதி மறுவரையறைக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்பின் ஒரு தன்னதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதன்பின் தான் தொகுதி வரையறையை மேற்கொள்வார்கள். 2026ம் ஆண்டுக்குள் இந்த பணி முடிய சாத்தியமில்லை. எனவே 2026ம் ஆண்டு தொகுதி மறுவரையறை காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுவரையறை செய்யப்படாது.

இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் வாழ்கையில் விளையாடுகிறது. வங்கிகளில் தங்க கடனை திருப்பி விட்டு, பின்பு மீண்டும் தான் வைக்க வேண்டும் என்ற திட்டம் வங்கிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். எனவே விரைவில் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேசிய கல்வி கொள்கை திட்டம் தாய்வழி கல்வியைத்தான் ஊக்குவிக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nirmala Sitharaman ,Chennai ,India ,Uttar Pradesh, ,West Bengal ,
× RELATED சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில்...