×

பாஜ ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு

சென்னை: சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பேசியதாவது: அரசியலமைப்பைக் காக்கவும் ஜனநாயகத்தைக் காக்கவும் பல்வேறு மாநில தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளோம். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்றாலும் முதல்வர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை காப்பதற்கான இந்த போராட்டத்துக்கு சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களின் உரிமையைக் காக்க அனைவரும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான இந்த கூட்டம் வரலாற்று போராட்டமாக இருக்கும். தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இன்று மத்திய அரசு துரோகம் இழைக்கிறது. இது அநியாயமானது.

இதனால் தென் மாநிலங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்க வாய்ப்புள்ளது. தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்படும் என்று மத்திய அரசு இதுவரை கூறவில்லை. பாஜ ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் இது. கூட்டாட்சித் தத்துவம் காக்கப்பட வேண்டும். நமது உரிமைகள், அடையாளம் காக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்கான கூட்டம்தான் இது. இது வடக்கு – தெற்கு இடையேயான போர் கிடையாது. ‘மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா’ என்ற தத்துவத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம்.

மறுசீரமைப்பு நடவடிக்கை மக்களவைத் தொகுதி எண்ணிக்கை பற்றியது மட்டுமல்ல. கூட்டாட்சியின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்தது தொடக்கம்தான். ஒன்றாக இணைந்து விவாதித்தால் அது முன்னேற்றம். அதுவே ஒன்றாக வேலை செய்தால் அது வெற்றி. மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றாகப் பயணித்து வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜ ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BAJA ,KARNATAKA ,DEPUTY CHIEF ,T. K. Sivakumar ,Chennai ,Deputy Prime Minister ,Shivakumar ,Constituent ,Reformation Group ,Chief Minister ,Siddaramaiah ,Bahia ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி